மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

காவிரி: தண்ணீர் திறக்க கர்நாடகம் மறுப்பு

மழைக் காலம் தொடங்குவற்கு முன்பே தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விட இயலாது என்று தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற காவிரி மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் கர்நாடகம் திட்டவட்டமாகத் தெரிவித்தது.

News image
Updated On :2 ஜூன் 2013, 12:16 am

மழைக் காலம் தொடங்குவற்கு முன்பே தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விட இயலாது என்று தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற காவிரி மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் கர்நாடகம் திட்டவட்டமாகத் தெரிவித்தது.

இதையடுத்து தமிழகத்துக்கு ஜூன் மாதம் திறந்து விட வேண்டிய நீரின் அளவை இறுதி செய்யாமலேயே, மேற்பார்வைக் குழுவின் அடுத்த கூட்டம் ஜூன் 12-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட காவிரி மேற்பார்வைக் குழுவின் முதல் கூட்டம் தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. மத்திய நீர் வளத்துறை செயலரும் குழுவின் தலைவருமான எஸ்.கே. சர்கார், தமிழக அரசின் தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன், கர்நாடக அரசின் தலைமைச் செயலர் எஸ்.வி. ரங்கநாத், கேரள அரசின் தலைமைச் செயலர் பரத் பூஷண், புதுச்சேரி அரசின் தலைமைச் செயலர் சேத்தன் பி. சாங்கி, மத்திய நீர் ஆணையத் தலைவர் ராஜேஷ் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழக பொதுப் பணித் துறைச் செயலர் எம். சாய் குமார், காவிரி தொழில்நுட்ப பிரிவின் தலைவர் ஆர். சுப்பிரமணியன், உறுப்பினர் எஸ். குலத்து ஆகியோர் தமிழக அரசின் சார்பில் பங்கேற்ற குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

தமிழக அரசு கோரிக்கை: இந்தக் கூட்டத்தில் ஷீலா பாலகிருஷ்ணன் கூறியது:

"தமிழகத்தின் குறுவை சாகுபடி ஜூன் மாதம் தொடங்கியுள்ளது. இந்த சாகுபடிக்காக வரும் செப்டம்பர் மாதம்வரை 134 டிஎம்சி நீரை வழங்க வேண்டும் என்று காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் மாதத்தில் தமிழகத்துக்கு 10 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும்.

2012-13 நீர்ப்பாசன ஆண்டில், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீர்ப் பங்கில் 53.18 டிஎம்சி நீரை கர்நாடகம் வழங்கவில்லை. அதையும் சேர்த்துத் திறக்க வேண்டும் என கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும்.

மேற்பார்வைக் குழு அலுவல் திட்டத்தில், "உறுப்பினர்களின் பெரும்பான்மை அடிப்படையில் முடிவு எடுக்கலாம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு செய்வது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. அந்த வரியை நீக்க வேண்டும். காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்தும் நடவடிக்கையில்தான் மேற்பார்வைக் குழு ஈடுபட வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.

கர்நாடகம் எதிர்ப்பு: இதற்கு ஆட்சேபம் தெரிவித்து கர்நாடக அரசின் தலைமைச் செயலர் எஸ்.வி. ரங்கநாத் பேசியது: "கர்நாடக மாநிலத்தில் புதிய அரசு இப்போதுதான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. அதனால், நதி நீர்ப் பங்கீடு குறித்து முடிவு எடுக்க நான்கு வார அவகாசம் தேவைப்படுகிறது.கர்நாடக அணைகளில் நீர் இருப்பு போதுமான அளவுக்கு இல்லை. அதனால் காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின்படி தண்ணீர் திறந்து விட இயலாது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின் விதிகளைப் பின்பற்றக் கூடாது. குழுவின் செயல் திட்டப் பரிந்துரைகள் தொடர்பாக மூன்று நாள்களில் கர்நாடகம் கருத்து தெரிவிக்கும்'' என்றார்.

புதுச்சேரி அரசுத் தலைமைச் செயலர் சேத்தன் பி. சாங்கி, ""புதுச்சேரியில் பயிரிடப்படும் 5 ஆயிரம் ஹெக்டேர் பயிர்களுக்கு நீர் வழங்க வேண்டும். காரைக்காலில் நீர் அளவை நிலையத்தை அமைக்க வேண்டும்'' என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய கேரள அரசின் தலைமைச் செயலர் பரத் பூஷண், ""கேரளத்தில் பருவ மழை தொடங்கிவிட்டது. எங்கள் மாநிலத்துக்கு நடுவர்மன்றம் வழங்கிய தீர்ப்பின்படி ஒதுக்கப்படும் குறைந்த நீரை பயன்படுத்தும் அளவுக்கு நீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை'' என்றார்.

சுமார் ஒன்றரை மணி நேரம் இந்தக் கூட்டம் நடைபெற்றது. அதன் முடிவில் குழுவின் தலைவர் சர்கார் பிறப்பித்த உத்தரவு வருமாறு:

""கடந்த ஆண்டு போதுமான அளவுக்கு பருவ மழை பெய்யவில்லை. கர்நாடகத்தின் நான்கு ஆணைகளில் மே 31-ம் தேதிவரை 3.77 டிம்சி நீரும், தமிழகத்தின் மேட்டூர் அணையில் 3.73 டிஎம்சி நீரும் உள்ளது.

நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பில், தமிழகத்துக்கு ஜூன் 1 முதல் 20-ஆம் தேதிவரை 1.2 டிஎம்சி நீரும், கர்நாடகத்துக்கு 0.9 டிஎம்சி நீரும் தேவைப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், வரும் நாள்களில் பருவ மழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் நீர்ப் பங்கீடு குறித்து முடிவு செய்ய வசதியாக வரும் 12-ஆம் தேதிக்கு மேற்பார்வைக் குழுவின் அடுத்த கூட்டம் தள்ளிவைக்கப்படுகிறது'' என்று சர்கார் உத்தரவில் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.