திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்

குற்ற வழக்குகளில் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்படும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களைத் தகுதி நீக்கம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்துள்ளது.

News image
Updated On :11 ஜூலை 2013, 11:47 pm

குற்ற வழக்குகளில் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்படும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களைத் தகுதி நீக்கம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்துள்ளது.

இதுதொடர்பாக வழக்குரைஞர் லில்லி தாமஸ் உள்ளிட்டோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீதான தீர்ப்பில் நீதிபதிகள் இவ்வாறு தெரிவித்தனர். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த உத்தரவால், அரசியலில் ஈடுபடும் குற்றவாளிகளின் எண்ணிக்கை குறையும் வாய்ப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. பட்நாயக் மற்றும் ஜே. முகோபாத்யாய ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த உத்தரவு விவரம்:

குற்ற வழக்குகளில் விசாரணை நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களை, தீர்ப்பு வெளியான நாளில் இருந்து தகுதி நீக்கம் செய்யலாம்.

அதேநேரம், தண்டனை விதிக்கப்பட்டவர்கள் இதை எதிர்த்து மேல் நீதிமன்றங்களில் முறையீடு செய்வதற்கு ஏதுவாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் (ஆர்.பி.ஏ.) பிரிவு 8(4)-ன்படி, அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பது இச்சட்டத்தின் அதிகார வரம்புக்கு உட்படாது என்று தங்கள் உத்தரவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், இத்தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன், தண்டனை பெற்று ஏற்கெனவே நீதிமன்றங்களில் மேல் முறையீடு செய்துள்ள எம்.பி., எம்எல்ஏக்களுக்கு இது பொருந்தாது.

குற்றம் இழைக்கப்படுபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் இருந்து விலக்கு பெறுவதில் சாமானியர்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையே உள்ள பாகுபாட்டைக் களைய வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

தீர்ப்பை ஆட்சேபிக்கும் அரசியல் கட்சிகள்

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் இந்தப் பிரிவை நீதிமன்றம் மாற்றுவதை அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றன. ஏனெனில், ஆளுங்கட்சியாக இருப்பவர்கள் தங்கள் அரசியல் எதிரிகள் மீது பொய் வழக்குகளைப் போட்டு இச்சட்டத்தின் கீழ் அவர்களைத் தேர்தல்களில் போட்டியிட இயலாமல் செய்ய முடியும் என்பது கட்சிகளின் வாதம்.

பல்வேறு அரசியல் கட்சிகளும் இத்தீர்ப்பு குறித்து மிகவும் எச்சரிக்கையுடனேயே கருத்து தெரிவித்துள்ளன. வழக்குரைஞர்களாக இருக்கும் மத்திய சட்டத்துறை அமைச்சர் கபில் சிபலும் பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாதும் இத்தீர்ப்பில் சட்டச் சிக்கல் இருப்பதால், தீர்ப்பைப் படித்துப் பார்த்து கருத்து சொல்வதாகக் கூறினர்.

இத்தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தைக் கோருமா? என்று கபில் சிபலிடம் கேட்டபோது, அதற்குப் பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார். ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ""அரசியல் நடைமுறைகளைத் தூய்மைப்படுத்தும் எந்த நடவடிக்கையையும் பாஜக ஆதரிக்கும்'' என்று பொதுப்படையாகக் கூறினார்.

எனினும், உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை வரவேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா ""இது மிகவும் முக்கியமான தீர்ப்பு. இந்த விவகாரத்தை அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையமும் எப்படிக் கையாளப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

சட்டம் சொல்வது என்ன?

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 8(3)-ன் கீழ், கிரிமினல் வழக்குகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் குற்றவாளி என நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டு, அறிவிக்கப்பட்டவர்கள், உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும், விடுதலை ஆனபின் 6 ஆண்டுகள் அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேநேரம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 8(4)-ன்படி, குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்கள் உத்தரவு வெளியான பின் 3 மாதங்கள் வரை அவர்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது என்றும், இந்தக் காலகட்டத்தில் உத்தரவை எதிர்த்து அவர்கள் மேல் நீதிமன்றங்களில் முறையீடு செய்யும் வகையில் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்படுவோர் பொது வாழ்வில் நேர்மையையும், தூய்மையையும் கடைபிடிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

எத்தனை பேர் மீது குற்ற வழக்குகள்?

ஏ.டி.ஆர். என்ற அரசுசாரா தன்னார்வ அமைப்பின் தகவலின்படி, இப்போதுள்ள எம்.பி.க்களில் 162 பேர் குற்ற வழக்குகளைச் சந்தித்து வருகின்றனர். அவர்களில் 76 பேர் மீது குறைந்தபட்சம் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படக் கூடிய வழக்குகள் உள்ளன. இதேபோல் நாடு முழுவதும் 1,460 எம்.எல்.ஏ.க்கள் குற்ற வழக்குகளைச் சந்தித்து வருகின்றனர். இவர்களில் 30% பேர் மீது 5 ஆண்டுகளுக்கும் அதிகமான சிறைத் தண்டனை விதிக்கப்படக் கூடிய வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.