/

துன்டாவின் போலீஸ் காவல் மேலும் 7 நாள்களுக்கு நீட்டிப்பு

நாடு முழுவதும் பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய பயங்கரவாதி அப்துல் கரீம் துன்டாவின் போலீஸ் காவலை தில்லி தலைமை மாநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மேலும் 7 நாள்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது.

News image
Updated On :11 செப்டம்பர் 2013, 5:29 pm

நாடு முழுவதும் பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய பயங்கரவாதி அப்துல் கரீம் துன்டாவின் போலீஸ் காவலை தில்லி தலைமை மாநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மேலும் 7 நாள்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது.

துன்டாவின் 4 நாள் போலீஸ் காவல் செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்தது. இதையடுத்து, துன்டாவின் போலீஸ் காவலை மேலும் 7 நாள்களுக்கு நீட்டிக்கக் கோரி, நீதிமன்றத்தில் தில்லி சிறப்பு போலீஸார் புதன்கிழமை மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தது: துன்டாவிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு உண்மைகள் தெரிய வந்துள்ளன. நாட்டின் முக்கிய நகரங்களில் நிகழ்த்திய பல்வேறு குண்டு வெடிப்புகளுக்கும் தனக்கும் தொடர்பு இருப்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

பாகிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊருடுவ ஏராளமானோருக்கு தான் உதவியதையும் ஏற்றுக் கொண்டார்.

குண்டு வெடிப்பு வழக்குகளில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள மெüல்வி நிஜாம், முகமது பசுருதீன் ஆகியோர் இந்த ஊடுருவலுக்கு தனக்கு உதவி புரிந்ததாகவும் கரீம் துன்டா கூறினார்.

இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் குறித்து இன்னும் ஏராளமான தகவல்களை துன்டாவிடம் இருந்து பெற வேண்டியுள்ளது.

குறிப்பாக உத்தர பிரதேசம், மேற்கு வங்கத்தில் துன்டாவின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்ட இடங்களுக்கு அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்த வேண்டியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், பில்குவாவில் வகுப்பு கலவரத்தால் பதற்றம் நிலவுகிறது. இதனால், கடந்த 4 நாள்கள் போலீஸ் காவலில் இருந்த போது துன்டாவை அங்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.

இதனால், அவரது போலீஸ் காவலை மேலும் 7 நாள்களுக்கு நீட்டித்து உத்தரவிட வேண்டும் என்று போலீஸார் கோரியிருந்தனர்.

மனுவை விசாரித்த தில்லி தலைமை மாநகர மாஜிஸ்திரேட் அமித் பன்சால், துன்டாவின் போலீஸ் காவலை மேலும் 7 நாள்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.