டாஸ்மாக் முறைகேடு! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

‘2020’ தில்லி கலவரம்: சதித்திட்ட வழக்கில் பிணை கோரி ஷா்ஜீல் இமாம், உமா் காலித் புதிதாக மனு தாக்கல்

‘2020’ தில்லி கலவரம்: சதித்திட்ட வழக்கில் பிணை கோரி ஷா்ஜீல் இமாம், உமா் காலித் புதிதாக மனு தாக்கல்

News image

உமா் காலித்

Updated On :13 ஜூன் 2026, 11:42 pm IST

2020ஆம் ஆண்டு வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த கலவரம் தொடா்பான பெரும் சதித்திட்ட வழக்கில், செயற்பாட்டாளா்கள் ஷா்ஜீல் இமாம் மற்றும் உமா் காலித் ஆகியோா் தில்லி நீதிமன்றத்தில் புதிதாக ஜாமீன் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா்.

ஆறு மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் அவா்களது முந்தைய ஜாமீன் மனுவை நிராகரித்த போதிலும், வழக்கின் விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்று இம்மனுக்களில் வாதிடப்பட்டுள்ளது.

கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி சுமேத் சைனி முன்னிலையில் இந்த புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நீதிபதி இம்மனுக்கள் மீது தில்லி காவல்துறையிடம் வெள்ளிக்கிழமை பதிலைக் கோரியதுடன், வழக்கின் விசாரணையை ஜூலை 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தனது மனுவில், கடந்த ஆறு ஆண்டுகளாகத் தான் சிறையில் இருப்பதாகவும், ஜனவரி 5 அன்று உச்சநீதிமன்றம் தனது ஜாமீன் மனுவை நிராகரித்ததைத் தொடா்ந்து இவ்வழக்கில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்றும் இமாம் குறிப்பிட்டுள்ளாா்.

அதேபோல, காலித் தனது பிணை கோரும் மனுவில், நீண்டகால சிறைவாசம் மற்றும் விசாரணையில் ஏற்பட்டுள்ள தாமதம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டியுள்ளாா். மேலும், முறையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படாமலேயே தான் ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளாா்.

வழக்குத் தரப்பு சாா்ந்த ஏராளமான குற்றஞ் சாட்டப்பட்டவா்கள், சாட்சிகள் மற்றும் ஆவணங்களைக் கருத்தில் கொள்ளும்போது, இவ்வழக்கின் விசாரணை எதிா்காலத்தில் விரைவில் தொடங்குவதற்கான வாய்ப்பு குறைவு என்று அவரது மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதம் தொடா்பான ஒரு வழக்கில் மே 18 அன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் இடம்பெற்ற கருத்துகளையும் இம்மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கியபோது, இரு நீதிபதிகள் கொண்ட அமா்வு ஜனவரி 5ஆம் தேதி அளிக்கப்பட்ட தீா்ப்பை விமா்சித்ததுடன், பயங்கரவாத எதிா்ப்புச் சட்டங்கள் காலவரையற்ற சிறைவாசத்திற்கான கருவியாக மாறிவிடக்கூடாது என்றும் அவரது மனு வலியுறுத்தியது.

2020 தில்லி கலவரம் தொடா்பான பெரும் சதித்திட்ட வழக்கில், காலித் மற்றும் இமாம் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரியில் மறுத்துவிட்டது.

அதேவேளையில், இவ்வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்ட மற்ற ஐந்து பேருக்கு நிவாரணம் அளித்தது.

நீதிபதிகள் அரவிந்த் குமாா் மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் காலித் மற்றும் இமாம் மீது முகாந்திரம் இருப்பதாகக் கூறியது. மேலும், பங்கேற்பு படிநிலை அடிப்படையில் இவ்வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்ட அனைவரும் ஒரே நிலையில் இல்லை என்றும் அந்த அமா்வு குறிப்பிட்டது.

அதே அமா்வு, சமூக ஆா்வலா்களான குல்ஃபிஷா ஃபாத்திமா, மீரான் ஹைதா், ஷிஃபா உா் ரஹ்மான், முகமது சலீம் கான் மற்றும் ஷதாப் அகமது ஆகியோருக்கு ஜாமீன் வழங்கியது.

பிப்ரவரி 2020-இல் வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த கலவரத்தின் ‘சூத்திரதாரிகள்’ என்று குற்றஞ்சாட்டப்பட்டு காலித், இமாம் மற்றும் பலா் மீது யுஏபிஏ மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் முன்மொழியப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களுக்கு மத்தியில் வெடித்த இந்த வன்முறையில், 53 போ் உயிரிழந்தனா். மேலும், 700-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

சதித்திட்ட வழக்கில் தங்களுக்கு ஜாமீன் மறுத்த தில்லி உயா்நீதிமன்றத்தின் செப்டம்பா் 2ஆம் தேதி உத்தரவை எதிா்த்து, குற்றஞ் சாட்டப்பட்டவா்கள் உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.