ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தீர்ப்பு: பசுமைத் தீர்ப்பாயத்தின் அதிகார வரம்பு என்ன?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தீர்ப்பு அளித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு எதிராக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (மதிமுக) பொதுச் செயலாளர் வைகோ உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

Updated On :11 செப்டம்பர் 2013, 7:50 pm

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தீர்ப்பு அளித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு எதிராக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (மதிமுக) பொதுச் செயலாளர் வைகோ உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் ஆலை செயல்படலாம் என்று தீர்ப்பு அளித்த பசுமைத் தீர்ப்பாயத்தின் அதிகார வரம்பு என்ன என்று மனுவில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது:

தில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு கடந்த ஆகஸ்ட் 8-இல் வழங்கிய தீர்ப்பில், "ஸ்டெர்லைட் ஆலையை மூடவும், அதன் மின் இணைப்பை நிறுத்தவும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் கடந்த மார்ச் 29-இல் பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து ஆலை தொடர்ந்து செயல்படலாம்' என்று கூறியுள்ளது. இந்த தீர்ப்பை வழங்க தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் உள்ளதா என்ற சட்ட ரீதியிலான சந்தேகம் எழுகிறது.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து காற்று மாசுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள மேல் முறையீட்டு ஆணையத்தில் முறையீடு செய்யாமல், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நேரடியாக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மேல் முறையீடு செய்தது சட்டத்தின்படி ஏற்புடையதா?

சென்னையில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் விசாரிக்கப்பட்டுவந்த ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பான வழக்கை தில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நேரடியாக தனது விசாரணைக்காக எடுத்துக் கொள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயச் சட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா?

இந்த வழக்கில் மனுதாரர்களுக்கு முன்னறிவிப்பு கொடுக்காமலும், அவர்களது கருத்தைக் கேட்காமலும் தில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரணைக்காக எடுத்துக் கொண்டது சரியான நடைமுறையா?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 226-வது பிரிவின் கீழ் உயர் நீதிமன்றங்களுக்கும், 136-வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்துக்கும் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரம் தேசிய பசுமைத் தீர்ப்பாயச் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள பசுமைத் தீர்ப்பாயங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா?

தில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயம், மாசைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் கடமையைக் கொண்ட தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் உத்தரவுகளை ரத்து செய்ய உகந்த காரணங்களை தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதா?

தில்லியில் உள்ள பசுமைத் தீர்ப்பாயம் வழங்கியுள்ள தீர்ப்பில் ஓர் ஆய்வுக் குழுவை அமைத்து, அந்த ஆய்வுக் குழு ஆலையையும் அதன் செயல்பாடுகளையும் ஆய்வு செய்து, அதன் அறிக்கையைப் பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருப்பது, இந்த வழக்கை முடித்து வைக்காமல் தன்னுடைய கட்டுப்பாட்டிலேயே வைத்திருப்பது சட்டப்படி ஏற்றுக் கொள்ளத்தக்கதா?

மேற்கண்ட கேள்விகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். அப்போதுதான் ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பு சரியானதா என்பதைத் தீர்மானிக்க முடியும். எனவே, விரைவில் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மனுவில் வைகோ கோரியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.