வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

மோடியை பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கத் தலைவர்கள் நெருக்குதல்

2014-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைப் பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அறிவிக்க வேண்டும் என்று அக்கட்சியின் பல மட்டங்களில் இருந்து கட்சி மேலிடத்துக்கு நெருக்குதல் வந்தவண்ணம் உள்ளது.

News image
Updated On :12 செப்டம்பர் 2013, 1:32 am IST

2014-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைப் பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அறிவிக்க வேண்டும் என்று அக்கட்சியின் பல மட்டங்களில் இருந்து கட்சி மேலிடத்துக்கு நெருக்குதல் வந்தவண்ணம் உள்ளது. ஆனால், மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க மூத்த தலைவரான எல்.கே. அத்வானி ஒப்புக் கொள்ளாததால், இந்த விவகாரத்தில் இழுபறி நீடிக்கிறது. இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக பாஜகவின் ஆட்சிமன்றக் குழுவைக் கூட்ட அதன் தலைவர் ராஜ்நாத் சிங் முடிவு செய்துள்ளார்.

அத்வானியுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு: இதையொட்டி, அத்வானியை அவரது இல்லத்தில் ராஜ்நாத் சிங் புதன்கிழமை காலையில் சந்தித்தார். சுமார் அரை மணி நேரம் அத்வானியுடன் அவர் பேசினார். அப்போது கடந்த ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாள்களில் பாஜக-ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் நடத்திய ஆலோசனையின் போது நரேந்திர மோடியைப் பிரதமராக்க தலைவர்கள் வலியுறுத்தியது குறித்து அத்வானியுடன் ராஜ்நாத் சிங் விவாதித்ததாகத் தெரிகிறது.

அத்வானி கருத்து: ஆனால், நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் அத்வானிக்கு உடன்பாடு இல்லை என்றும் தில்லி, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக அத்தகைய அறிவிப்பை வெளியிடுவது கூட்டணியிலும், கட்சி அளவிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் அத்வானி அச்சம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

குழப்பம் இல்லை: இரு தலைவர்களின் சந்திப்பு குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு "நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் விஷயத்தில் கட்சி மேலிட அளவில் குழப்பம் இல்லை. ஆட்சிமன்றக் குழுதான் அதை முடிவு செய்யும்' என்றார்.

ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் எப்போது?: இந்நிலையில், ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தை வெள்ளிக்கிழமை கூட்டி விவாதிக்கலாம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி, யஷ்வந்த் சின்ஹா, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் யோசனை தெரிவித்தனர். அதை ஏற்று ஆட்சிமன்றக் குழுவைக் கூட்ட ராஜ்நாத் சிங் முடிவு செய்துள்ளார்.

முன்னதாக, ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) கூட்டலாம் என்று ராஜ்நாத் சிங் திட்டமிட்டிருந்தார். ஆனால், தில்லியில் துணை மருத்துவ மாணவி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தண்டனை அறிவிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானதால் ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தை பின்னர் கூட்டுவதற்கு ராஜ்நாத் சிங் திட்டமிட்டுள்ளதாகப் பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

நரேந்திர மோடியை பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று ஒரு பிரிவு கட்சித் தலைவர்கள் அளவில் குரல் ஒலிக்கத் தொடங்கிய போதே அதற்கு எதிரான நிலையை அத்வானி கொண்டுள்ளார்.

இந்த விஷயத்தில் அத்வானிக்கு ஆதரவாக சுஷ்மா ஸ்வராஜும், முரளி மனோகர் ஜோஷியும் இருப்பதாகத் தெரிகிறது.

சில மாதங்களுக்கு முன்பு, நரேந்திர மோடியை கட்சியின் தேர்தல் பிரசாரக் குழு தலைவராகப் பாஜக மேலிடம் நியமித்த போது, அத்வானி திடீரென தனது கட்சிப் பொறுப்புகளை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து பாஜக தலைவர்கள் சமாதானப்படுத்தியதால் தனது ராஜிநாமா முடிவை அத்வானி திரும்பப் பெற்றுக் கொண்டார். இந்நிலையில், மோடியை பிரதமர் வேட்பாளராக பாஜக மேலிடம் அறிவித்தால், அக்கட்சி மேலிட அளவில் பூசல் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.