குற்றம்சாட்டப்பட்ட 5 பேரும் நாளை ஆஜராக உத்தரவு
தில்லி மாணவி பாலியல் பலாத்காரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் ஜனவரி 7ஆம் தேதி ஆஜர்படுத்தும்படி தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தில்லி மாணவி பாலியல் பலாத்காரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் ஜனவரி 7ஆம் தேதி ஆஜர்படுத்தும்படி தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ஆய்வு செய்த நீதிபதி, ""குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கொலை, கொலை முயற்சி, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது'' என்றார்.
கைது செய்யப்பட்டுள்ள சிறுவன் மீதும் ஜனவரி 7ஆம் தேதி சிறார் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் என்று தில்லி போலீஸார் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் பெரும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் இந்த வழக்கு விசாரணை நீதிபதி நம்ரிதா அகர்வால் முன்பு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்குரைஞர் ராஜீவ் மோகன் முன் வைத்த வாதம்:
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவியும், அவரது நண்பரும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வாக்குமூலம் அளித்துள்ளனர். உயிரிழப்பதற்கு முன்பு மாணவி அளித்த வாக்குமூலம் மரண வாக்குமூலமாகக் கருதப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த குற்றச்சாட்டுகள் நிரூபணமாகும் கட்டத்தில் உள்ளன.
மாணவி, அவரது நண்பரின் உடமைகள், பொருள்கள் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்களின் உடைகளில் இருந்த ரத்தக் கறை அனைத்தும் பாதிக்கப்பட்டவரின் ரத்தம்தான் என்று மத்திய தடயவியல் ஆய்வுக் கூடம் உறுதி செய்துள்ளது.
மாணவி, அவரது நண்பர் ஆகியோரிடம் பறித்த, ரத்தக் கறைகள் படிந்த துணிகளைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தீயிட்டு அழித்துள்ளனர். அப்படியும் தீயில் கருகாத துணித் துண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள ரத்தக் கறையும் பாதிக்கப்பட்டவரின் ரத்த மாதிரியும் ஒத்துப் போகிறது. இவையனைத்தையும் அடிப்படையாக வைத்துத்தான் 5 பேர் மீது கொலை, பாலியல் வன்கொடுமை, பாலியல் பலாத்காரம், ஆதாரங்களை அழித்தல், கொலை முயற்சி, கடத்தல், கூட்டாக வழிப்பறி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக 80 சாட்சிகளும், 12 ஆதாரங்களும் உள்ளன என்று அரசு வழக்குரைஞர் ராஜீவ் மோகன் கூறினார்.
மேலும், இந்த வழக்கில் உயிரிழப்பதற்கு முன்பு மாணவி அளித்த வாக்குமூலத்தை வழக்குரைஞர் ராஜீவ் மோகன் நீதிபதி முன்பு சமர்ப்பித்தார்.
இதை ஏற்று கொண்ட நீதிபதி நம்ரிதா அகர்வால் பிறப்பித்த உத்தரவு:
இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 302 (கொலை), 376 (பாலியல் வன்கொடுமை), 377 (இயற்கைக்கு விரோதமாக பாலியலில் ஈடுபடுதல்), 201 (ஆதாரங்களை அழித்தல்), 307 (கொலை முயற்சி), 365 (கடத்தல்), 396 (கூட்டாக வழிப்பறி, கொலை செய்தல்) ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது.
ராம் சிங், முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் ஆகியோரை ஜனவரி 7ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த வழக்கு அடுத்த வாரம் விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு தினந்தோறும் விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னணி: கடந்த டிசம்பர் 16ஆம் தேதி ஓடும் பஸ்ஸில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். டிசம்பர் 29ஆம் தேதி சிகிச்சை பலன் அளிக்காமல் சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார். ஒரு சிறுவன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 33 பிரதான பக்கங்களும் அதனுடன் 1000 பக்கங்களையும் கொண்ட குற்றப்பத்திரிகையை தில்லி போலீஸார் ஜனவரி 4ஆம் தேதி தாக்கல் செய்தனர்.
தில்லி மாணவியின் நண்பர் புகார்: போலீஸ் மறுப்பு
புது தில்லி, ஜன.5: தில்லியில் பாலியல் பலாத்காரத்தில் உயிரிழந்த மாணவியின் நண்பர் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை தில்லி போலீஸார் மறுத்துள்ளனர். தில்லியில் பாலியல் பலாத்காரத்தில் உயிரிழந்த மாணவியின் நண்பர், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தபோது, சம்பவம் நடந்தபோது போலீஸாரின் செயல்பாடுகள் குறித்து குற்றம்சாட்டியிருந்தார்.
அதை மறுத்து சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தில்லி போலீஸ் இணை ஆணையர் விவேக் கோகியா கூறியதாவது:
பாலியல் பலாத்காரம் நடந்த அன்று போலீஸ் வாகனங்கள் தாமதமாக வந்ததாகவும் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்க்க நேரம் கடத்தியதாகவும் கூறப்படுவதில் உண்மை இல்லை. பிசிஆர் எனப்படும் காவல்துறை கட்டுப்பாட்டு அறை வாகனங்கள் போலீஸ் நிலையங்களின் கட்டுப்பாட்டில் இல்லை. அவை போலீஸ் தலைமை அலுவலகத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருபவை. எனவே இந்த விஷயத்தில் போலீஸ் நிலையங்களைக் குறை கூற முடியாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...