ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

அதிருப்தியில் பிரதமர்?

பிரதமர் பதவியில் தான் நீடிக்க விரும்பவில்லை என்றும், அடுத்து வரும் மக்களவைத் தேர்தலில் தகுதி வாய்ந்த ஒருவரைப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்திருப்பதாகத் தெரிகிறது.

News image
Updated On :13 மே 2013, 1:51 am IST

பிரதமர் பதவியில் தான் நீடிக்க விரும்பவில்லை என்றும், அடுத்து வரும் மக்களவைத் தேர்தலில் தகுதி வாய்ந்த ஒருவரைப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்திருப்பதாகத் தெரிகிறது. கடந்த சில நாள்களாக நடைபெற்று வரும் சம்பவங்களும், அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளும், இரண்டு அமைச்சர்களின் பதவி நீக்கமும் அவரை அதிருப்தியில் ஆழ்த்தி இருப்பதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காமன்வெல்த் விளையாட்டு ஏற்பாடு, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஆகியவற்றில் முறைகேடுகள், அரசுத் துறைகளில் மலிந்து காணப்படும் ஊழல் என மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு மீது அடுத்தடுத்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.

இந்த நிலையில், பொதுவாழ்வில் அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக பெயர் எடுத்த தன்னை நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் அரசியல் கட்சிகள் தொடர்புபடுத்திப் பதவி விலகக் கோருவது பிரதமருக்கு மிகுந்த மன வருத்தத்தையும், கவலையையும் அளித்துள்ளதால், தொடர்ந்து பிரதமராக நீடிக்கத் தான் விரும்பவில்லை என்று சோனியாவிடம் அவர் கூறியிருப்பதாகத் தெரிகிறது.

தில்லியில் கடந்த 10-ஆம் தேதி காங்கிரஸ் உயர் நிலைக் குழுக் கூட்டம் பிரதமர் இல்லத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில்தான் ரயில்வே பணி நியமன முறைகேட்டில் தொடர்புடையதாகக் கூறப்படும் பவன் குமார் பன்சால் ரயில்வே அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்யவும், சிபிஐ அறிக்கையை பார்வையிட்ட விவகாரத்தில் மத்திய சட்ட அமைச்சர் பதவியை அஸ்வனி குமார் ராஜிநாமா செய்யவும் நடவடிக்கை எடுக்கும்படி பிரதமரை சோனியா காந்தி வலியுறுத்தியதாகக் கூறப்படு

கிறது.

இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து சோனியாவும், மன்மோகன் சிங்கும் சுமார் ஒன்றரை மணி நேரம் பேசினர். இந்த சந்திப்பின்போது, சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் ஆகியோரும் உடனிருந்தனர்.

அப்போது, அண்மைக்காலமாக அரசு நிர்வாகத்தில் நடைபெறும் ஊழல், முறைகேடு சர்ச்சையைத் தடுக்கத் தம்மால் இயலவில்லை என்று சோனியாவிடம் பிரதமர் கவலை தெரிவித்துள்ளார்.

மன்மோகன் சிங் 1969-இல் அன்னிய வர்த்தகத் துறையின் ஆலோசகராகத் தமது அரசுப் பணியைத் தொடங்கினார். தொடர்ந்து நிதித்துறை தொடர்பான பல்வேறு பதவிகளில் பணியாற்றிய அவர், 1972-76 வரை மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராகவும், 1982-85 வரை ரிசர்வ் வங்கியின் கவர்னராகவும் இருந்தார்.

1985-87 வரை மத்திய திட்டக் குழு துணைத் தலைவராக அவர் பணியாற்றினார். அவரது அனுபவமும் நிதிக் கொள்கையைக் கையாளும் திறனும் அனைவராலும் பாராட்டப்பட்டது. ஆசிய வளர்ச்சி வங்கி, பன்னாட்டுச் செலாவணி நிதியம், உலக வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்களிலும் இயக்குநராகப் பணியாற்றிய அனுபவசாலி அவர்.

இந்த நிலையில், 1991-ஆம் ஆண்டு இந்தியா பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தபோது, மன்மோகன் சிங்கை அப்போதிருந்த பிரதமர் நரசிம்ம ராவ் மத்திய நிதி அமைச்சராக நியமித்தார்.

அப்போது எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே தாராளமயமாக்கல் கொள்கையை அமல்படுத்தி இந்திய தொழில்துறை, பன்னாட்டு அரசுகளின் கவனத்தை இந்தியா மீது மன்மோகன் சிங் ஈர்த்தார்.

1998-2004 ஆண்டுகளில் மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக மன்மோகன் சிங் பணியாற்றினார்.

பின்னர் 2004-இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்றது. பிரதமராக மன்மோகன் சிங்கை காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்தது. 2009-ஆம் ஆண்டு தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து பிரதமராக மன்மோகன் சிங் நீடித்து வருகிறார்.

கடந்த 2004-09 ஆண்டு வரை நிலக்கரித் துறையை தன் வசம் மன்மோகன் சிங் வைத்திருந்த காலத்தில், தனியாருக்கு நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டன. அதில், தகுதியற்ற தனியார் நிறுவனங்கள் ஆதாயம் அடைந்ததாகவும் இதனால், அரசுக்கு ரூ. 1.86 லட்சம் கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) குறிப்பிட்டுள்ளார்.

அதன் பிறகுதான் இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷண் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் 2012-ஆம் ஆண்டில் வழக்குத் தொடர்ந்தனர். சிபிஐயும் வழக்கை விசாரிக்கத் தொடங்கியது.

இந்த வழக்கின் விசாரணை அறிக்கையை அரசில் இருப்பவர்களிடம் காட்டாமல் நேரடியாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் சிபிஐ இயக்குநருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதை மீறி சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவை தமது அலுவலகத்துக்கு அஸ்வனி குமார் வரவழைத்தார். அறிக்கையில் அவரும் அவரைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகம், மத்திய நிலக்கரித் துறை அதிகாரிகளும் சில திருத்தங்களைச் செய்தனர்.

இந்த விவகாரம் பின்னர் நீதிமன்றத்தில் சிபிஐ இயக்குநர் கடந்த 10-ஆம் தேதி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் மூலம் உறுதிசெய்யப்பட்டது. இந்த நடவடிக்கையைத்தான் பிரதமரைக் காப்பாற்ற அஸ்வனி குமாரும் அரசுத் துறை அதிகாரிகளும் மேற்கொண்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், அஸ்வனி குமார் பதவியில் இருந்து விலகிய பிறகும் திருப்தியடையாத எதிர்க்கட்சிகள் தற்போது பிரதமர் மன்மோகன் சிங்கும் இந்த விவகாரத்தில் தார்மிகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றன. இந்த நிலையில், வரும் 27-ஆம் தேதி முதல் ஜூன் 2-ஆம் தேதி வரை மத்திய அரசுக்கு எதிராக சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப் போவதாக பாஜக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பிரதமர் மன்மோகன் சிங்கை மிகவும் அதிருப்தி அடைய வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

"19 ஆண்டு அரசுப் பணியின் போதும், 23 ஆண்டு கால அரசியல் வாழ்வின் போதும் தன் மீது எந்த அரசியல் கட்சியோ, அமைப்போ ஊழல் புகார் சுமத்தவில்லை. 81 வயதை எட்டிய நிலையில், தன் மீது ஊழல் புகாரைச் சுமத்தி நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகளும் சமூக அமைப்புகளும் எழுப்பி வரும் குரல்கள், பிரதமரை மிகவும் மனவருத்தமடையச் செய்துள்ளதாகத் தெரிகிறது.

அதனால்தான் வரும் ஜூன் மாதத்துடன் அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள தனது பதவிக் காலம் நிறைவடையும்போது மீண்டும் போட்டியிட விரும்பவில்லை என்றும், நாட்டின் பிரதமராக நீடிக்க விருப்பமில்லை என்றும் கட்சித் தலைவி சோனியாவிடம் பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார்' என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையடுத்து, பிரதமரைச் சமாதானம் செய்ய முயன்ற சோனியா, "ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சி முடிவடைய ஓராண்டு உள்ள நிலையில் அத்தகைய முடிவை எடுக்கக் கூடாது என்றும் அடுத்து நடைபெறும் தேர்தலில் உங்கள் நிலைப்பாடு குறித்து விவாதிக்கலாம்' என்று சமாதானப்படுத்தி இருப்பதாகவும் தெரிகிறது. அதனால் உடனடியாகப் பதவி விலகும் திட்டத்தை அவர் கைவிட்டாலும் கூட, மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.