தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட "தி சௌத் இந்தியா கிளப்' கட்டடத்தை இடிக்க முயற்சி

தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரால் 1966-இல் திறந்து வைக்கப்பட்ட "தி சௌத் இந்தியா கிளப்' கட்டடத்தை இடிக்க ஞாயிற்றுக்கிழமை மாலையில் திடீரென்று முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

News image
Updated On :26 மே 2013, 8:56 pm

அ. சர்ஃப்ராஸ்

தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரால் 1966-இல் திறந்து வைக்கப்பட்ட "தி சௌத் இந்தியா கிளப்' கட்டடத்தை இடிக்க ஞாயிற்றுக்கிழமை மாலையில் திடீரென்று முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த சில தமிழர்கள் தலையிட்டதையடுத்து, கட்டடத்தை இடிக்கும் நடவடிக்கையை தனியார் ஒப்பந்ததாரர் தாற்காலிகமாகக் கைவிட்டார்.

தில்லி மந்திர் மார்க் பகுதியில் "தி சௌத் இந்தியா கிளப்' உள்ளது. அந்த

கட்டத்தை 1966 மே 15-இல் அப்போதைய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த காமராஜர் திறந்து வைத்தார். அந்த கிளப்பில் உள்ள அரங்குக்கு "சத்தியமூர்த்தி அரங்கம்' என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது.

தொடக்க காலத்தில் தமிழர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்த கிளப்பில் தில்லிக்கு வரும் தமிழக எம்பிக்கள் சார்பில் ஏராளமான நிகழ்ச்சிகளும், தமிழர்களின் கலாசார நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இத்தனை பெருமையும், பழமையும் வாய்ந்த கிளப் இருந்த கட்டடம், கடந்த 25 ஆண்டுகளாக கவனிப்பாரற்ற நிலையில் உள்ளது. அதைப் பயன்படுத்தி கட்டடத்தைக் கைப்பற்ற சிலர் சதி செய்வதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

அந்தக் கட்டடத்தை இடிக்க ஞாயிற்றுக்கிழமை மாலையில் சிலர் முற்பட்டனர். ஏறத்தாழ கட்டடத்தின் மேல் கூரைப் பகுதி முழுவதும் இடிக்கப்பட்டது.

அதையடுத்து, அந்தப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள மந்திர் மார்க் டிடிஇஏ பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்ட தமிழர்கள் "கட்டடத்தை இடிக்கக்கூடாது' என்று காவல் நிலையத்தில் முறையிட்டனர்.

ஆனால், யாருடைய நெருக்குதலால் கட்டடத்தைத் தனியார் ஒப்பந்ததாரர் இடித்தார் என்ற கேள்விக்கு போலீஸாரிடம் பதில் இல்லை.

இது குறித்து போலீஸாரிடம் சங்க நிர்வாகிகள் முறையிட்டனர்.

ஆனால், "நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு ஆவணங்களை திங்கள்கிழமை காண்பியுங்கள்; அதன் பிறகு இந்த விஷயத்தில் முடிவு செய்யலாம்' என்று போலீஸார் தெரிவித்தனர்.

கவனிப்பாரற்றுக் கிடக்கும் கட்டடத்துக்குப் பாதுகாவலர் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாதந்தோறும் ஒரு நிறுவனம் ஊதியம் வழங்கி வருகிறது.

ஆனால், அவரை நியமித்தவர் யார்? எந்த அடிப்படையில் பாதுகாவலரை அந்த நிறுவனம் நியமித்துள்ளது என்ற கேள்விகளுக்கு விடையில்லை.

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் அடையாளமாக விளங்கிய தி சௌத் இந்தியா கிளப்புக்கு புத்துயிரூட்ட தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் முன்வர வேண்டும் என்பதே தில்லிவாழ் தமிழர்களின் எதிர்பார்ப்பு.

தி சௌத் இந்தியா கிளப் கட்டடத்தை ஞாயிற்றுக்கிழமை இடிக்கும் முயற்சி அரங்கேறிய போது அதை நேரில் பார்த்த தமிழர்கள் கூறியது:

வி. பார்த்தசாரதி: "தில்லியில் முதல் முதலாக தென் மாநிலத்தவர்களுக்காக தொடங்கப்பட்ட கிளப் இது.

தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இதில் உறுப்பினர்களாக இடம் பெற்றிருந்தனர்.

1967-இல் தமிழகத்தின் முதல்வராக அண்ணாதுரை பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக தில்லி வந்தார். அவருக்கு இந்த கிளப்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

அந்தக் கூட்டத்தில் மு. கருணாநிதி, மதியழகன், நெடுஞ்செழியன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

புகழ் பெற்ற பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் இசைக் கச்சேரி, நாடகங்கள் ஆகியவையும் இதில் நடைபெற்றுள்ளன.

இந்த கிளப்பின் உறுப்பினராக நானும் இருந்தேன். அந்த அடிப்படையில் இந்தக் கட்டடத்தை இடிக்க அனுமதிக்க முடியாது.

கி. பென்னேஸ்வரன்: 1920-ஆம் ஆண்டுகளில் இந்த கிளப் உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. 1966-இல் மந்திர் மார்கில் கிளப்புக்கான கட்டடம் எழுப்பப்பட்டது. இதில் ஏராளமான தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.

1990-ஆம் ஆண்டு வரை இந்த கிளப் இயங்கி வந்தது. அதன் பிறகு பராமரிப்பின்றி கிடக்கிறது. கிளப்பின் நிர்வாகிகளை இப்போது அடையாளம் காண இயலவில்லை. இந்த நிலையில், கிளப் அமைந்த கட்டடத்தை சிலர் அபகரிக்க முற்படுகின்றனர்.

ஆர். ராஜு, டிடிஇஏ செயலர்: தி சௌத் இந்தியா கிளப் வழங்கிய குத்தகை இடத்தில்தான் மந்திர் மார்க் டிடிஇஏ பள்ளி செயல்பட்டு வருகிறது.

இது தொடர்பான 1923-ஆம் ஆண்டு இருவருக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தின் அப்போதைய நிர்வாகிகள் யாரும் தற்போது இல்லை என்று தெரிகிறது.

எங்கள் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்குள் வர போதிய இடம் இல்லை. அதனால், கிளப்புக்கு சொந்தமான இடத்தை எங்கள் பள்ளிக்கு ஒதுக்கித் தர உத்தரவிடக் கோரி 2006- இல் வழக்குத் தொடர்ந்தோம்.

அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் கட்டடத்தைக் கைப்பற்ற மாஃபியாக்கள் ஈடுபடுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. இந்த முயற்சியைத் தடுக்க சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.