செம்மரக் கடத்தலைத் தடுக்கும் மோப்ப நாய்கள்!ஆந்திர அரசு திட்டம்
செம்மரக்கட்டை கடத்தலைத் தடுக்க மோப்ப நாய்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.


செம்மரக்கட்டை கடத்தலைத் தடுக்க மோப்ப நாய்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.
ஆந்திர மாநிலம், சேஷாசல வனப்பகுதியில் செம்மரங்களை கடத்தல்காரர்கள் வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்தி செல்கின்றனர். இதைத் தடுக்க ஆந்திர அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கடத்தல்காரர்களை கைது செய்து, அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல சிறப்புப்படைப் பிரிவுகளை ஏற்படுத்தி கண்காணித்தபோதும் செம்மரக்கட்டை கடத்தலை போலீஸாரால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை.
கடத்தல்காரர்கள் செம்மரங்களை வெட்டி வனத்திலோ அல்லது வனத்தின் அருகிலுள்ள விவசாய நிலங்களிலோ பல அடி ஆழத்தில் புதைத்து வைக்கின்றனர். போலீஸாரின் கண்காணிப்பு குறையும்போது அவற்றை வெளியே எடுத்து கடத்தி வருகின்றனர். பல அடி ஆழத்தில் புதைத்து வைக்கும் செம்மரக்கட்டைகளை சிறப்புப் படை அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடிவதில்லை.
எனவே, மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளித்து அதன்மூலம் செம்மரக் கடத்தலைத் தடுக்க தற்போது ஆந்திர அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக, 2 மாத வயதுள்ள நாய்களைத் தேர்ந்தெடுத்து அதற்கு 6 மாத காலம் பயிற்சி அளித்து, செம்மரக் கடத்தலைத் தடுக்கும் பணிகளில் பயன்படுத்த உள்ளனர். வனத்துறையினர் ரோந்தில் ஈடுபடும்போது உடன் பயிற்சியளித்த மோப்ப நாய்களை அழைத்துச் சென்றால் அவை செம்மரங்களின் வாசனையைக் கொண்டு பதுக்கி வைத்திருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விடும்.
சோதனைச் சாவடிகளைக் கடந்து செல்லும் வாகனங்களில் செம்மரம் கடத்தப்பட்டாலும் மோப்ப நாய்கள் கண்டறிந்துவிடும். இந்த நாய்களுக்கு ஹைதராபாத் அருகிலுள்ள விகாரபாத்தில் பயற்சி அளிக்கப்பட உள்ளது. இன்னும் 8 மாதத்தில் இந்த நாய்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கர்நாடகத்தில் "ஆபரேஷன் ரெட்'
கர்நாடக மாநிலத்தில் சித்தூர் போலீஸார் "ஆபரேஷன் ரெட்' தாக்குதல் நடத்தி 2 டன் செம்மரக் கட்டைகளைப் பறிமுதல் செய்தனர்.
கடந்த 2 நாள்களுக்கு முன் திருப்பதி அருகிலுள்ள பாக்கராபேட்டை வனப்பகுதியில் கைது செய்யப்பட்ட கடப்பா மாவட்ட கடத்தல்காரன் மல்லிகார்ஜுனா அளித்த தகவலின் அடிப்படையில், சித்தூர் சிறப்புப் படை அதிகாரிகள் கர்நாடக மாநிலம், கடிகனஹள்ளிக்குச் சென்றனர்.
அங்கு அவர்கள், செம்மரக்கட்டை வாங்குபவர்கள் போல மாறுவேடத்தில் சென்று அங்குள்ள கடத்தல்காரர்களிடம் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டனர். பின்னர் அதிரடியாகச் செயல்பட்டு, அங்கு மறைத்து
வைக்கப்பட்டிருந்த 2 டன் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளைப் பறிமுதல் செய்ததுடன், அப்பகுதியைச் சேர்ந்த சில கடத்தல்காரர்களையும் கைது செய்துள்ளனர்.
சேஷாசல வனத்தில் வெட்டப்படும் செம்மரக்கட்டைகள் கடிகனஹள்ளிக்குக் கொண்டு செல்லப்பட்டு பதுக்கி வைக்கப்படுகின்றன. பின்னர் அங்கிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. அந்த ஊருக்குள் வெளியாள்கள் யாரும் எளிதாக நுழைய முடியாது. அவ்வாறு சென்றால், அவர்கள் கொல்லப்படுவர்.
அந்தப் பகுதிக்குச் சென்று சித்தூர் சிறப்புப் படை அதிகாரிகள் நடத்திய "ஆபரேஷன் ரெட்' தாக்குதலில் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. அவர்கள் சித்தூர் நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...