

குவாஹாட்டி: அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட தேர்தலில் காலை 10 மணி வரையில் 25 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
அஸ்ஸாம் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில், 65 தொகுதிகளுக்கு கடந்த 4ஆம் தேதி முதல் கட்டத் தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள 61 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
வாக்காளர்கள், குறிப்பாக பெண்களும், முதல் தலைமுறை வாக்காளர்களும் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
காலை 10 மணி வரையில் 25 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்ததாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறின.
இரண்டு முறை முதல்வராகப் பதவி வகித்தவரும் அஸ்ஸாம் கன பரிஷத் தலைவருமான பிரஃபுல்லா குமார் மஹந்தா மற்றும் அவரது மனைவியும் முன்னாள் எம்.பி.யுமான ஜெயஸ்ரீ மஹந்தா ஆகியோர் பர்ஹாம்பூர் பகுதியில் தங்களது வாக்குகளைச் செலுத்தினர்.
மேலும், அஸ்ஸாம் தேர்தலில் நான் தான் 'கிங்-மேக்கர்' என கூறிவரும் ஏஐயூடிஎப் தலைவர் பத்ரூதீன் அஸ்மலும் தனது வாக்கை செலுத்தினார்.
வாக்குப்பதிவின் போது, சில இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. பின்னர் அவை சீரமைக்கப்பட்டு வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது. இதுவரை குறிப்பிடும்படியான அசம்பாதவித சம்பவங்கள் ஏதும் இல்லை என போலீஸார் கூறினர்.
இன்று நடைபெறும் தேர்தலில் 525 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 477 பேர், ஆண்கள். 48 பேர் பெண்கள். சுமார் 1 கோடியே 04 லட்சம் பேர் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றுள்ளனர். இதில், ஆண்கள் 53,91,204 பேர். பெண்கள் 50,44,051 பேர்.
61 தொகுதிகளில், காங்கிரஸ் 57 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி 47 தொகுதிகளிலும், பாஜக 35, அதன் கூட்டணிக் கட்சிகளான போடோ மக்கள் முன்னணி 10, அஸ்ஸாம் கண பரிஷத் 10 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 9, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5 தொகுதிகளிலும் தங்களது வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.