

கொல்லம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே கோயிலில் பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக கோயில் நிர்வாகிகள் 5 பேர் போலீஸார் முன்னிலையில் இன்று சரணடைந்தனர்.
கொல்லம் அருகே பரவூரில் உள்ளது 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புற்றிங்கல் தேவி கோயில். இந்தக் கோயிலில் கடந்த 7 நாள்களாக திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. விழாவின் கடைசி நாளான சனிக்கிழமை இரவு போட்டிபோட்டுக் கொண்டு பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அப்போது சில பட்டாசுகள், மற்றோர் பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளுக்கு இடையே விழுந்து வெடித்தன. இதையடுத்து ஏற்பட்ட விபத்தில் 109 பேர் இறந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் குற்றப்பிரிவு போலீஸார், கோயில் நிர்வாகிகள், பட்டாசு வெடிப்பதற்கு ஒப்பந்தம் எடுத்தவர்கள் உள்ளிட்ட 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் கோயில் நிர்வாகிகள் 5 பேர் இன்று போலீஸார் முன்னிலையில் சரணடைந்தனர். கோயில் நிர்வாகக் குழு தலைவர் ஜெயலால், செயலாளர் கிருஷ்ணன் குட்டி மற்றும் சிவபிரசாத், சுரேந்திரன் பிள்ளை, ரவீந்திரன் பிள்ளை ஆகியோர் சரணடைந்த நிலையில் மற்ற இரு நிர்வாகிகளான சுரேந்திரநாதன் பிள்ளை, முருகேசன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
தடைசெய்யப்பட்ட வெடிமருந்துகளைப் பயன்படுத்தி பட்டாசு தயாரித்ததாலே இத்தகைய விபத்து ஏற்பட்டுள்ளது போலீஸார் கூறினர்.
இந்நிலையில், கேரள மாநிலத்தில் கோயில் விழாக்களின் போது பட்டாசுகள் வெடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி திருவனந்தபுரம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது.
மேலும், கோயில் திருவிழாக்களில் வாணவேடிக்கை நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பது குறித்து விவாதிப்பதற்கான அனைத்துக் கட்சிக் கூட்டம் வருகிற 14 ஆம் தேதி நடைபெறும் என மாநில முதல்வர் உம்மன் சாண்டி அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.