16 ஆண்டுகால உண்ணாவிரதத்தை நாளை முடித்துக் கொள்கிறார் இரோம் ஷர்மிளா

மணிப்பூர் மாநில உரிமைகளுக்காக போராடி வரும் இரோம் ஷர்மிளா (44), தனது 16 ஆண்டுகால உண்ணாவிரதப் போராட்டத்தை நாளை காலை முடித்துக் கொள்ளப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 ஆண்டுகால உண்ணாவிரதத்தை நாளை முடித்துக் கொள்கிறார் இரோம் ஷர்மிளா
Updated on
1 min read

மணிப்பூர்: மணிப்பூர் மாநில உரிமைகளுக்காக போராடி வரும் இரோம் ஷர்மிளா (44), தனது 16 ஆண்டுகால உண்ணாவிரதப் போராட்டத்தை நாளை காலை முடித்துக் கொள்ளப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரோம் ஷர்மிளாவின் சகோதரர் இதோம் சிங்கஜித் கூறுகையில், இரோம் ஷர்மிளாவின் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடாது என்பதால் கடந்த 2000ஆவது ஆண்டு முதல் அவருக்கு வலுக்கட்டாயமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.

செவ்வாய்க்கிழமை காலை அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது, அவர் தனது உண்ணாவிரதத்தை கைவிடுவதாக அறிவிக்க உள்ளார் என்று தெரிவித்தார்.

இதையடுத்து அவர் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னணி: கடந்த 16 ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆகஸ்ட்  9-ஆம் தேதி கைவிடுவதாக அறிவித்தார் இரோம் ஷர்மிளா. மேலும் மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவும் முடிவு செய்துள்ளார். விரைவில் தனது திருமணம் குறித்த அறிவிப்பையும் அவர் வெளியிட உள்ளார்.

மணிப்பூர் உள்ளிட்ட 7 வடகிழக்கு மாநிலங்களில் அண்டை நாட்டவரின் ஊடுருவலைத் தடுக்கும் வகையில் அங்கு 1958-ஆம் ஆண்டு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனால் இந்த மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் முழுக்க முழுக்க பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டனர்.

பாதுகாப்புப் படையினருக்கு கூடுதல் அதிகாரங்களை இச்சட்டம் வழங்குவதால் மனித உரிமைகள் அதிக அளவில் மீறப்படுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், கடந்த 2000-ஆம் ஆண்டு மணிப்பூரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 10 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். ஆனால், இதுதொடர்பாக பாதுகாப்புப் படையினர் முறையாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

இந்தச் சம்பவமே சமூக ஆர்வலரான இரோம் ஷர்மிளாவை போராட்டத்தில் இறங்கத் தூண்டியது. இதன் தொடர்ச்சியாக, மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி

இரோம் ஷர்மிளா உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால், அவரது கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காததால் தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என இரோம் ஷர்மிளா அறிவித்தார்.

மணிப்பூர் மாநில உரிமைகளை மீட்கக் கோரி பொதுமக்களுடன் இணைந்து பல்வேறுகட்ட போராட்டங்களில் அவர் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து, பல தருணங்களில் இரோம் ஷர்மிளாவை பாதுகாப்புப் படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். உணவருந்தாததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் மீது தற்கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. எனினும், தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த ஷர்மிளா, உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com