

புதுதில்லி: முறைகேடான பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகப் பொதுத்துறை வங்கிகளைச் சேர்ந்த 27 வங்கி அதிகாரிகளைப் பணியிடை நீக்கம் செய்தும் 6 பேரை பணியிட மாற்றம் செய்தும் நிதியமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கருப்புப் பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையாக புழக்கத்தில் இருந்த உயர் மதிப்புடைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த மாதம் 8-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை பொதுமக்கள் வங்கிகளில் கொடுத்து மாற்றி வருகின்றனர்.
மேலும் கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் அதனை மாற்றுவதற்குப் பல்வேறு சட்ட விரோத முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர்.
அவர்களுடைய இந்த சட்ட விரோத முயற்சிக்கு வங்கி அதிகாரிகள் சிலர் உதவுவதாகத் தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து, ரிசர்வ் வங்கி நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும், பணப் பரிவரித்தனைகள் தொடர்பாக பல்வேறு நெறிமுறைகள் மற்றும் கட்டுபாடுகளை விதித்தது.
அதில், பணப் பரிமாற்றம் தொடர்பான விஷயங்களில் வங்கி அலுவலர்கள் கவனமாக இருக்க வேண்டும். பணப் பரிவர்த்தனை ஆவணங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும்.
கருப்புப் பணப் பதுக்கல்காரர்களுக்கு எந்த வகையிலும் உதவக் கூடாது. அவ்வாறு உதவி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி
எச்சரித்திருந்தது.
இதையடுத்து ஒருசில வங்கி அதிகாரிகள் உதவியுடன் பழைய ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகளை மாற்றி புதிய ரூபாய் நோட்டுகள் பெறப்படுவதாக எழுந்த புகாரின்பேரில், வருமான வரித் துறையினர் பெங்களூரில் கடந்த 30-ஆம் தேதி முதல் அரசு உயரதிகாரிகள், ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் நடத்திய சோதனையில் ரூ.5.7 கோடி மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
மேலும், 4 தனியார் வங்கி கிளைகளில் இருந்து பழைய நோட்டுகள் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக மாற்றப்பட்டு, பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டதாக வருமான வரித் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, அந்த வங்கி மேலாளர்களிடம் வருமான வரித் துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், பணப் பரிவர்த்தனையின் போது ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதற்காக பொதுத் துறை வங்கிகளைச் சேர்ந்த 27 வங்கி
அலுவலர்களை மத்திய நிதி அமைச்சகம் அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் 6 பேரை முக்கியத்துவம் அல்லாத இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
வருமான வரித்துறையினர் பெங்களூரு மற்றும் 12 இடங்களில் உள்ள வளாகங்களில் மிகப்பெரிய அளவில் நடத்திய அதிரடி சோதனையில், வருமானத்துக்குப் பொருந்தாத ரூ.152 கோடி மதிப்பிலான கணக்கில் வராத ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.