

ஹரியாணா மாநிலத்தில் இட ஒதுக்கீடு கோரி ஜாட் சமூகத்தினர் நடத்தி வரும் போராட்டம் வன்முறையில் முடிந்தது. பாதுகாப்பை உறுதி செய்ய 8 மாவட்டங்களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்களால் சாலைப் போக்குவரத்து முழுமையாக முடக்கப்பட்டதால் வன்முறையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ரோஹ்தக் மாவட்டத்தில் விமானம் மூலம் ராணுவ வீரர்கள் தரையிறக்கப்பட்டனர்.
நேற்று வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது பிஎஸ்எஃப் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். வன்முறை மேலும் பரவாமல் தடுக்கும் வகையில், 2 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வன்முறையில் ஈடுபடுபவர்களைக் கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல், பதற்றம் நிலவும் 8 மாவட்டங்களுக்கு ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.
ஹரியாணாவில் ஜாட் சமூகத்தினர் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தங்களையும் சேர்க்க வலியுறுத்தி கடந்த சில நாள்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இதுதொடர்பாக அனைத்து கட்சியினருடன் ஹரியாணா முதல்வர் கட்டார் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை.
இதுதொடர்பான தகவல் பரவியதும், ரோத்தக், ஜஜ்ஜார், ஜிந்த், பிவானி, ஹிஸார் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜாட் சமூகத்தினர் வன்முறையில் ஈடுபட்டனர். ரோத்தக், ஜஜ்ஜார், ஹான்சி ஆகிய இடங்களில் போலீஸார் மீதும், அவர்களின் வாகனங்களின் மீதும் போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். சில இடங்களில் போலீஸாரை சிறைபிடித்துக் கொண்டனர்.
மேலும், தில்லி-ஹிசார்-பஜ்லிகா தேசிய நெடுஞ்சாலையில் ஹான்சியில் உள்ள அரசு அலுவலகங்கள், வாகனச் சாவடிகள் மீதும் போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். ரோத்தக்கில் பிஎஸ்எஃப் வீரர் ஒருவரின் உடலில் தீ வைத்தனர். இதில் அவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, பிஎஸ்எஃப் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலியானார்.
வன்முறை மேலும் பரவி வருவதையடுத்து, ரோத்தக், ஜஜ்ஜார், ஜிந்த், பிவானி, ஹிஸார், கைத்தால், பானிபட், சோனிபட் ஆகிய 8 மாவட்டங்களுக்கும் ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடமும் துணை ராணுவத்தின் 20 படைப்பிரிவுகளை அனுப்பி வைக்கும்படி ஹரியாணா அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஜாட் சமூகத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், ரயில் போக்குவரத்தும் பல இடங்களில் பாதிக்கப்பட்டது. இதனால் ரயில்வேக்கு சுமார் ரூ.200 கோடி இழப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.