ஜேஎன்யூ போராட்டம் குறித்த விடியோ உண்மையானவை: சிபிஐ சோதனையில் உறுதி

தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 9 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது மாணவர்கள் பேசியது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட விடியோக்கள் உண்மையானவை என தெரியவந்துள்ளது
ஜேஎன்யூ போராட்டம் குறித்த விடியோ உண்மையானவை: சிபிஐ சோதனையில் உறுதி
Updated on
1 min read

புது தில்லி: தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 9 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது மாணவர்கள் பேசியது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட விடியோக்கள் உண்மையானவை என தெரியவந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடைபெற்றது.  நாடாளுமன்ற தாக்குதல் சம்பவத்தில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில், மாணவர்கள் தேச நலனுக்கு விரோதமாக பேசினார்களாம்.

இதையடுத்து மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் உள்ளிட்ட மூவர் மீது தேசதுரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்தப் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட சில விடியோக்களை தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் திருத்தம் செய்து ஒளிபரப்பியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், மாணவர்கள் நாட்டு நலனக்கு எதிராக பேசவில்லை என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், தனியார் இந்தி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று, போராட்டம் தொடர்பாக பதிவு செய்த விடியோ காட்சிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டன. தொலைக்காட்சி நிறுவனத்தின் கேமிரா, பதிவுக் காட்சிகள் அனைத்தும் தில்லியில் உள்ள மத்திய குற்றப் பிரிவு போலீஸாரின் (சிபிஐ) தடயவியல் ஆய்வுக்கூடத்தில் சோதனை செய்யப்பட்டன.

இந்த சோதனை முடிவுகள் தில்லி போலீஸாருக்கு கடந்த 8 ஆம் தேதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதில், போராட்டம் குறித்த விடியோ பதிவுகள் அனைத்தும் உண்மையானவை என தெரிவிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

விடியோ பதிவு குறித்து சோதனை அறிக்கை கிடைக்கப் பெற்றதை உறுதி செய்துள்ள தில்லி காவல் துறையின் சிறப்பு ஆணையர் அரவிந்த் தீப், அதில் உள்ள தகவல்களை தெரிவிக்க மறுத்துவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com