

வசதிப் படைத்தவர்களுக்கு இடஒதுக்கீடு சலுகைகள் வழங்கக் கூடாது என ஆர்எஸ்எஸ் வலியுறுத்திய நிலையில், தற்போதைய இடஒதுக்கீடு முறையே தொடரும் என மத்திய அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.
நாக்பூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ். மாநாட்டுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதன் பொதுச் செயலாளர் சுரேஷ் ஜோஷி, வசதி படைத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்றார்.
மாநிலங்களவை இன்று கூடியதும், இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என சமஜ்வாதி உறுப்பினர் நரேஷ் அகர்வால் அளித்த ஒத்திவைப்பு தீர்மானத்தை ஏற்க மறுத்தார் அவை நடத்திக் கொண்டிருந்த துணைத் தலைவர் ஜி.ஜே.குரியன்.
சமாஜ்வாதி உறுப்பினருக்கு ஆதரவாக பகுஜன் சமாஜ்வாதி, ஜனதா தளம் (ஐக்கியம்) கட்சி உறுப்பினர்களும் இப்பிரச்னையை எழுப்பினர். அதற்கு பதிலளிந்த குரியன், ஆர்.எஸ்.எஸ். என்பது தனியார் அமைப்பு. அதுகுறித்து நீங்கள் ஏன் கவலைக் கொள்ள வேண்டும் என்றார்.
இதற்கு சமாஜவாதி உறுப்பினர் ராம்கோபால் வர்மா தெரிவிக்கையில், "ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும், மத்திய அரசுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது; தற்போது அமலில் இருக்கும் இடஒதுக்கீடு முறையை ரத்து செய்வதற்கு சதி நடக்கிறது' என்றார்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பேசுகையில், "அரசமைப்புச் சட்டத்தில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் இடஒதுக்கீடு வழங்குவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது; ஆனால் ஆர்எஸ்எஸ் அமைப்பு பொருளாதார முறையில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பேசுகிறது' என்றார். ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் சுரேஷ் ஜோஷி, இடஒதுக்கீடு முறை தொடர்பாக தெரிவித்த கருத்துகளையும் சுட்டிக்காட்டினார்.
அப்போது மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி குறுக்கிட்டு பேசுகையில், "சுரேஷ் ஜோஷி இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கவில்லை; தற்போது அமலில் இருக்கும் இடஒதுக்கீடு முறையைத் தொடருவது என்பது அரசின் கொள்கையாகும்' என்றார்.
அதேபோல், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பதிலளிக்கையில், "இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பு ஒருபோதும் தெரிவிக்கவில்லை. எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் கேள்விக்கே இடமில்லை' என்றார்.
இதைத் தொடர்ந்து, பி.ஜே. குரியன் பேசியபோது, இடஒதுக்கீடு முறை தொடர்பாக மத்திய அரசு உறுதியளித்து விட்டதால், அவையை செயல்படுவதற்கு உறுப்பினர்கள் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.