புது தில்லி : பிரஸ்ஸெல்ஸ் குண்டுவெடிப்பில் பலியான தமிழக மென்பொறியாளர் ராகவேந்திரன் கணேஷின் உடல் இன்று சென்னைக்குக் கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மார்ச் 22ம் தேதி மெட்ரோ ரயிலில் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ராகவேந்திரன் கணேஷும் ஒருவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, பிரஸ்ஸெல்ஸ் குண்டுவெடிப்பில் பலியானவர்களில் ராகவேந்திரன் கணேஷும் ஒருவர் என்பதை இந்திய அதிகாரிகள் உறுதி செய்திருப்பதை அறிவிப்பதில் மிகுந்த வேதனை அடைகிறேன். அவரது உடல், பிரஸ்ஸெல்ஸ் சென்றுள்ள அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.
பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸெல்ஸ் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின்போது காணாமல் போன தமிழக மென்பொறியாளர் ராகவேந்திரன் கணேஷ் உயிரிழந்துவிட்டார் என்று பெல்ஜியத்தில் உள்ள இந்தியத் தூதரகம் திங்கள்கிழமை அறிவித்தது.
சென்னையைச் சேர்ந்தவர் ராகவேந்திரன் கணேஷ். மென்பொருள் பொறியாளரான இவர், பெல்ஜியம் நாட்டுத் தலைநகர் பிரஸ்ஸெல்ஸில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், அந்த நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்துக்குப் பின்னர் ராகவேந்திரன் கணேஷைத் தொடர்புகொள்ள முடியவில்லை என அவரது தாயார் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் அறிவுறுத்தலின் பேரில், ராகவேந்திரனின் செல்லிடப்பேசி மூலம் அவரது இருப்பிடத்தைக் கண்டறியும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
அவரது செல்லிடப்பேசியில் முறையான சமிக்ஞைகள் கிடைக்கப் பெறாததால் அவரது இருப்பிடம் குறித்து அறிய முடியவில்லை. இதனைத் தொடர்ந்து, ராகவேந்திரனின் செல்லிடப்பேசியிலிருந்து பேசப்பட்ட கடைசி அழைப்பைக் கொண்டு சோதனை செய்ததில், பிரஸ்ஸெல்ஸ் நகர மெட்ரோ ரயிலில் பயணம் செய்தது கண்டறியப்பட்டது.
இந்நிலையில், குண்டுவெடிப்பில் உடல் சிதைந்து உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியை பெல்ஜியம் அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர். அப்போது, உயிரிழந்தவர்களில் ராகவேந்திரன் கணேஷும் ஒருவர் என்பது தெரியவந்தது. இதனை பெல்ஜியத்தில் உள்ள இந்தியத் தூதரகமும் உறுதி செய்தது.
குண்டு வெடிப்புக்குப் பிறகு ராகவேந்திரன் கணேஷ் காணாமல் போனதை அடுத்து அவரது குடும்பத்தினர் சில நாள்களுக்கு முன்பு பிரஸ்ஸெல்ஸ் சென்றனர்.
முன்னதாக, பிரஸ்ஸெல்ஸ் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை விமான நிலையத்திலும், மெட்ரோ ரயில் நிலையத்திலும் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்களில் 35 பேர் பலியாயினர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இத்தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.