கர்நாடகத்தின் குடிநீர்த் தேவைக்காக மட்டுமே காவிரியில் தண்ணீர் திறக்கப்படும்

அணைகளில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால், கர்நாடகத்தின் குடிநீர்த் தேவைக்காக மட்டுமே காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படும் என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
கர்நாடகத்தின் குடிநீர்த் தேவைக்காக மட்டுமே காவிரியில் தண்ணீர் திறக்கப்படும்

அணைகளில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால், கர்நாடகத்தின் குடிநீர்த் தேவைக்காக மட்டுமே காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படும் என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
காவிரி ஆற்றுப் படுகையில் உள்ள அணைகளிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி, கர்நாடத்தில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்திவரும் நிலையில், பெங்களூரு கிருஷ்ணா அரசு இல்லத்தில் புதன்கிழமை மைசூரு, மண்டியா, ஹாசன், குடகு மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், நீர்வளத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் சித்தராமையா கூறியது:
குடிநீர்த் தேவைக்காக காவிரி ஆற்றுப்படுகையில் உள்ள ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீர் நிரப்புவதற்காக மட்டுமே கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளில் இருந்து ஆக.10 (வியாழக்கிழமை) முதல் தண்ணீர் திறந்து விடப்படும். இந்த நீரை பாசனத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்.
விவசாயப் பணிகளில் ஈடுபடக் கூடாது என்பது அரசின் நோக்கமல்ல. தண்ணீரைஅதிகம் உறிஞ்சும் நெல் போன்ற பயிர்களை விளைவிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம். குடிநீருக்கே போதுமான தண்ணீர் இல்லை. இதனால் பொதுமக்கள், கால்நடைகள் குடிநீர் இல்லாமல் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்தத் தேவையை நிறைவு செய்வதற்காகத்தான் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படவிருக்கிறது. கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி அணைகளின் அச்சுக்கட்டுப் பகுதிகளில் விவசாயத்தில் ஈடுபட்டுவரும் மக்கள், அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடுமாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நிலத்தடிநீர் வற்றி விட்டதாகவும், ஆழ்துளைக் கிணறு தோண்டினால் 1000 அடி ஆழத்தில் கூட தண்ணீர் கிடைக்கவில்லை என்றும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்கக் கூடாது என்பது அரசின் நோக்கமல்ல. விவசாயிகளைப் பாதுகாப்பதுதான் அரசின் கடமை.
நிகழாண்டில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட குறைவாக பெய்துள்ளது. கடந்த 46 ஆண்டுகளில் இதுபோல குறைவாக மழை பெய்துள்ளது இதுவே முதல் முறையாகும். மாநிலத்தில் கடந்தாண்டும் வறட்சி தீவிரமாக இருந்தது. ஆனால், நிகழாண்டு அளவுக்கு மழை குறைவாக இருந்ததில்லை.
கடந்த ஆண்டு இதேநாளில் காவிரி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள நான்கு அணைகளில் மொத்தம் 53.52 டிஎம்சி தண்ணீர் இருந்தது. நிகழாண்டில் நீரின் அளவில் 45 டிஎம்சி ஆக உள்ளது. அணைகளின் நீர்வரத்தும் வெகுவாக குறைந்துள்ளது. அணைகளின் அச்சுக்கட்டு பகுதிகளிலும் போதுமான மழை பெய்யவில்லை. இதன்காரணமாகவே அணையின் நீர்நிலைப் பகுதிகளில் தண்ணீர் இல்லாத நிலை உருவாகியுள்ளது.
காவிரி ஆற்றுப் படுகையில் 2.68 லட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்படுகிறது. அதனால்தான் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடத் தயங்கினோம். ஆனால், குடிநீர் இல்லை என்று விவசாயிகள் முறையிட்டதைத் தொடர்ந்து, நிலத்தடிநீரை மேம்படுத்த ஏரி, குளங்களை நிரப்ப தண்ணீர் திறந்துவிட முடிவு செய்துள்ளோம்.
தமிழகத்துக்கு திறக்கப்பட்டுள்ள நீரில் எந்தளவு குறைக்க வேண்டுமோ, அந்தளவுக்கு குறைத்துத்தான் திறந்து விட்டுள்ளோம். கர்நாடகத்தில் போதிய மழை பெய்யாததால், தமிழகத்துக்கு தண்ணீர் தரும் அளவு குறைந்துள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com