தனி மனித விவரங்களை காப்பது அடிப்படை உரிமையா? ஆதார் வழக்கில் நாளை தீர்ப்பு
தனி மனித விவரங்களைக் காப்பது அடிப்படை உரிமையா? இல்லையா? என்பது குறித்த ஆதார் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.


புது தில்லி: தனி மனித விவரங்களைக் காப்பது அடிப்படை உரிமையா? இல்லையா? என்பது குறித்த ஆதார் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
ஆதாரை கட்டாயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கின் இணைப்பு வழக்காக இது விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்.
தனிநபர் ரகசியம் காத்தல் என்பது அரசமைப்புச் சட்டத்தின்கீழ் மக்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமையா? என்பது குறித்து 9 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்த வழக்கில் நாளை வெளியாகும் இந்த தீர்ப்பின் மூலமாகத்தான் ஆதார் கட்டாயமா? இல்லையா? என்பது தெரிய வரும்.
ஆதாருக்கு அரசியல் சாசன ரீதியில் அங்கீகாரம் அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தொடுக்கப்பட்டன. அந்த மனுக்களில், ஆதார் திட்டமானது, தனிநபர் ரகசியம் காத்தல் தொடர்பான அடிப்படை உரிமையில் குறுக்கிடுவதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் சார்பில் அப்போதைய அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜராகி, இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் முன்பு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகவும், ஆதலால், தனிநபர் ரகசியம் காத்தல் என்பது அடிப்படை உரிமையா? அல்லது அடிப்படை உரிமை இல்லையா? என்பது குறித்து முதலில் முடிவெடுக்க வேண்டும் என்றார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், அந்த மனுக்களை 5 நீதிபதிகள் கொண்ட மிகப்பெரிய அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
இந்நிலையில், மேற்கண்ட மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், ஜே. செலமேஸ்வர், எஸ்.ஏ. பாப்தே, டி.ஒய். சந்திரசூட், எஸ். அப்துல் நாசீர் ஆகிய 5 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.
காரக் சிங், எம்.பி. சர்மா ஆகியோரது வழக்குகளில், தனிநபர் ரகசியம் காத்தல் என்பது அடிப்படை உரிமையாகாது என்று உச்ச நீதிமன்றத்தால் முன்பு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதாவது, காரக் சிங் வழக்கு மீதான தீர்ப்பை கடந்த 1960-ஆம் ஆண்டில் 6 நீதிபதிகள் கொண்ட அமர்வும், எம்.பி. சர்மா வழக்கு மீதான தீர்ப்பை கடந்த 1950-ஆம் ஆண்டில் 8 நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு சாசன அமர்வும் அளித்துள்ளன.
இந்த 2 தீர்ப்புகளும் சரியானவைதானா? என்பது குறித்து, 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து, அரசமைப்புச் சட்டத்தின் 3-ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளில், தனிநபர் ரகசியம் காத்தல் உள்ளிட்டவை அடங்குமா? என்பது குறித்து முடிவெடுக்கும் என்று முடிவு செய்யப்பட்டது.
ஆதார் திட்டம் தொடர்பான வழக்கில் மத்திய அரசின் சார்பில் வாதிடும் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலையும், மனுதாரர்கள் சார்பில் வாதிடும் மூத்த வழக்குரைஞர்கள் அரவிந்த் தாதர், ஷியாம் திவன், கோபால் சுப்பிரமணியம், ஆனந்த் குரோவர் ஆகியோரையும், அவர்கள் தரப்பு விளக்கங்களை தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து, தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையில், நீதிபதிகள் ஜே. செலமேஸ்வர், எஸ்.ஏ. பாப்தே, ஆர்.கே. அகர்வால், ரோஹின்டன் ஃபாலி நாரிமன், அபேய் மனோகர் சாப்ரே, டி.ஒய். சந்திரசூட், சஞ்சய் கிஷாண் கௌல், எஸ். அப்துல் நஸீர் ஆகிய 9 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், நாளை தீர்ப்பளிக்கப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...