குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால்தான் தமிழகத்துக்கு காவிரி நீர்: முதல்வர் சித்தராமையா விளக்கம்

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால்தான் தமிழகத்துக்கு காவிரி நதிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார்.

News image
Updated On :3 ஜூலை 2017, 7:41 pm

DIN

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால்தான் தமிழகத்துக்கு காவிரி நதிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஹாசனில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
கர்நாடக மாநில விவசாயிகளின் நலன்களைப் புறக்கணித்து விட்டு, தமிழகத்துக்கு காவிரி நதி நீரை அளிக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றுவதற்காகவே தமிழகத்துக்கு காவிரி நதி நீரைத் திறந்துவிட்டிருக்கிறோம்.
கர்நாடகத்தில் உள்ள அனைத்து அணைகளில் இருக்கும் தண்ணீரை தமிழகத்துக்கு திறந்து விடவில்லை. நதி நீர்ப் பங்கீடு விவகாரத்தில் தமிழக அரசு எப்போதும் உண்மையைச் சொன்னதில்லை.
காவிரி நதியில் இருந்து நீரைத் திறந்துவிடாமல் இருந்தால், உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு அணுகும். அப்படியானால், அது கர்நாடக நலன்களைப் பாதிக்கும் என்பதால், தமிழகத்துக்கு கொஞ்சம் தண்ணீரை திறந்து விட்டிருக்கிறோம்.
தென் மேற்குப் பருவ மழை பெய்து வருவதால், காவிரியில் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளது. அந்த நீர்வரத்து திருப்திகரமாக இல்லை என்றாலும், உச்ச நீதிமன்றத்தை திருப்திப்படுத்துவதற்காக காவிரி நதி நீரைத் திறந்திருக்கிறோம்.
மேக்கேதாட்டு அணை: காவிரி நதியின் குறுக்கே மேக்கேதாட்டு அணையைக் கட்டும் பணி வெகு விரைவில் தொடங்கப்படும். இந்தத் திட்டத்துக்கு அனுமதி கேட்டு முன்மொழிவுகளை அனுப்பியிருக்கிறோம். மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும், மேக்கேதாட்டு அணைக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும். இந்த அணை திட்டத்தால் தமிழகத்துக்கு எந்தத் தொந்தரவும் ஏற்படப் போவதில்லை. கர்நாடக மாநிலத்தின் நலன் காக்கும் பொருட்டு, மேக்கேதாட்டு அணைத் திட்டம் செயல்படுத்தப்படவிருக்கிறது.
செயற்கை மழை: மாநிலத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. ஒருவேளை போதுமான மழை பெய்யாவிட்டால், செயற்கை மழைக்கு முயற்சி மேற்கொள்ளப்படும். இதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து வருகிறோம்.
நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி. பாட்டீலை பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா ஒருமையில் வசைபாடியதற்கு என்ன காரணம் என்பது புரியவில்லை. எடியூரப்பா போன்ற தலைவர்கள் முதலில் பண்பாட்டை அறிந்துகொள்ள வேண்டும். முன்னாள் மத்திய அமைச்சர் ஜனார்த்தன பூஜாரியின் விமர்சனங்களுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை.
மீண்டும் காங்கிரஸ் ஆட்சி: கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு (2018) நடைபெறவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும். எங்கள் அரசின் மக்கள் நலத் திட்டங்களே மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர உதவும். காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள் ஒற்றுமையோடு தேர்தலைச் சந்திக்கவிருக்கிறார்கள். தொண்டர்களை ஒருங்கிணைப்பதற்காகவே மண்டல மாநாடுகளை நடத்தி வருகிறோம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.