பயங்கரவாதிகள் தாக்குதலில் அமர்நாத் யாத்ரீகர்கள் 7 பேர் பலி

ஜம்மு- காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக்கில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்தியத் தாக்குதலில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த யாத்ரீகர்கள் 7 பேர் பலியாகினர்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த யாத்ரீகர்களுக்கு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த யாத்ரீகர்களுக்கு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை.

ஜம்மு- காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக்கில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்தியத் தாக்குதலில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த யாத்ரீகர்கள் 7 பேர் பலியாகினர். மேலும் 32 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்த விவரம் வருமாறு:
ஜம்மு- காஷ்மீர் மாநிலம், அமர்நாத் குகைக்கோயிலில் இருக்கும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் ஆண்டுதோறும் யாத்திரை செல்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான யாத்திரை கடந்த மாதம் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் பக்தர்கள், அமர்நாத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அமர்நாத் யாத்திரை சென்றுவிட்டு, சோனாமார்க் எனுமிடத்தில் இருந்து குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த யாத்ரீகர்கள் ஒரு பேருந்தில் ஜம்முவுக்கு திரும்பி வந்துக் கொண்டிருந்தனர். அனந்த்நாக்கில் கானாபால் எனுமிடத்தில் அந்தப் பேருந்து வந்தபோது பயங்கரவாதிகள் திடீரென அதன்மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த தாக்குதலில், 6 பெண்கள் உள்பட 7 யாத்ரீகர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 32 பேர் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து பலத்த காயமடைந்தனர்.
முன்னதாக, காவல்துறையினர் வந்த கவச வாகனத்தின்மீதும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு காவல்துறையினரும் துப்பாக்கியால் திருப்பிச் சுடவே, பயங்கரவாதிகள் தப்பியோடி விட்டனர். அதன்பிறகே, யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரையிலும் எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத அமைப்பில் ஏதேனும் ஒரு அமைப்பு இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதனிடையே, அமர்நாத் யாத்ரீகர்களை ஏற்றி வந்த பேருந்து ஓட்டுநர் விதிகளை மீறியுள்ளதாக காவல்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
அதாவது, யாத்திரை செல்லும் வாகனங்கள் இரவு 7 மணிக்கு மேல் பக்தர்களை ஏற்றிச் செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், அதை பேருந்து ஓட்டுநர் மீறிவிட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 2000- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு அமர்நாத் யாத்ரீகர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நிகழ்த்திய முதலாவது மிகப்பெரிய தாக்குதலாக இச்சம்பவம் கருதப்படுகிறது.


பிரதமர் மோடி கண்டனம்
அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சுட்டுரையில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள பதிவுகளில் அவர் தெரிவித்திருப்பதாவது:
ஜம்மு- காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது நடத்தப்பட்டுள்ளகொடூரத் தாக்குதலால் நான் அடைந்த வேதனைகளை தெரிவிக்க வார்த்தைகள் இல்லை. இதுதொடர்பாக ஆளுநர் என்.என். வோரா, முதல்வர் மெஹபூபா முஃப்தி ஆகியோருடன் தொலைபேசியில் பேசினேன். அப்போது அவர்களிடம் தேவைப்படும் உதவிகளை மத்திய அரசு அளிக்கும் என்று உறுதியளித்தேன். இத்தகைய கோழைத்தனமான தாக்குதலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.
ஜம்மு- காஷ்மீர் ஆளுநர் வோரா, முதல்வர் மெஹபூபா முஃப்தி ஆகியோரை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, தாக்குதல் சம்பவம் தொடர்பான முழு விவரங்களை முதல்வர், ஆளுநரிடம் ராஜ்நாத் சிங் கேட்டார். மேலும், அமர்நாத் யாத்திரைக்கு தேவைப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படியும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
இதேபோல், பாதுகாப்பு துறை அமைச்சர் அருண் ஜேட்லியும், அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியபோது, பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்ற இந்தியாவின் உறுதியை மேலும் அதிகரிக்கச் செய்திருப்பதாக குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com