மத்தியில் ஆட்சியிலிருந்தபோது கோபாலகிருஷ்ண காந்தியை ஏன் குடியரசு துணைத் தலைவராக்கவில்லை?: காங்கிரஸுக்கு பாஜக கேள்வி

மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியிலிருந்தபோது, கோபால கிருஷ்ண காந்தியை ஏன் குடியரசு துணைத் தலைவராக்கவில்லை என்று

மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியிலிருந்தபோது, கோபால கிருஷ்ண காந்தியை ஏன் குடியரசு துணைத் தலைவராக்கவில்லை என்று காங்கிரஸுக்கு பாஜக கேள்வியெழுப்பியுள்ளது.
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில், குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் அக்கட்சிகள் சார்பில் போட்டியிடும் பொது வேட்பாளராக மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி தேர்வு செய்யப்பட்டார். இதை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
இதுகுறித்து தெலங்கானா மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் கிருஷ்ண சாகர் ராவ், ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது:
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தியை காங்கிரஸ் கட்சியும், அதன் நட்புக் கட்சிகளும் தேர்வு செய்துள்ளன. இத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தோல்வியடைவது உறுதி என்று கூறப்படும் நிலையில், அவரை அக்கட்சிகள் தேர்வு செய்திருப்பது, மகாத்மா காந்திக்கு இழைக்கும் அவமரியாதை ஆகும்.
காந்தி என்ற பெயரை பயன்படுத்தி, மகாத்மா காந்திக்கு காங்கிரஸ் நம்பிக்கை துரோகம் செய்கிறது. காங்கிரஸ் கட்சி ஓர் சுயநலமுடைய, சந்தர்ப்பவாத கட்சியாகும். குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக தேர்வு செய்ததன் மூலம், கோபால கிருஷ்ண காந்தியை காங்கிரஸ் பலிகடாவாக்கியுள்ளது.
மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தொடர்ந்து 2 முறை (10 ஆண்டுகள்) ஆட்சியிலிருந்தபோது, மகாத்மா காந்தியின் உறவினர் அல்லது மீரா குமாரை குடியரசுத் தலைவராகவும், குடியரசு துணைத் தலைவராகவும் ஏன் ஆக்கவில்லை? இது மிகவும் தரம்தாழ்ந்த மற்றும் கீழத்தரமான அரசியலாகும் என்றார் கிருஷ்ண சாகர் ராவ்.
முன்னதாக, குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பிகார் முன்னாள் ஆளுநரும், தலித் சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் சார்பில் மக்களவை முன்னாள் தலைவரும், தலித் சமூகத்தைச் சேர்ந்தவருமான மீரா குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com