நாடாளுமன்றம் இன்று கூடுகிறது

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் திங்கள்கிழமை (ஜூலை 17) தொடங்குகிறது.
மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையில்  தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம்.
மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையில் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் திங்கள்கிழமை (ஜூலை 17) தொடங்குகிறது.

இந்த கூட்டத் தொடரில், காஷ்மீர் விவகாரம், சிக்கிம் எல்லையில் சீனாவுடன் ஏற்பட்டுள்ள தகராறு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்புவதற்கு எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கி, வரும் ஆகஸ்ட் மாதம் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கூட்டத் தொடரின் முதல் நாளான திங்கள்கிழமையன்று, மறைந்த மத்திய அமைச்சரும், மாநிலங்களவை எம்.பி.யுமான அனில் மாதவ் தவே, மறைந்த மாநிலங்களவை காங்கிரஸ் எம்.பி. பல்வாய் கோவர்த்தன் ரெட்டி, மறைந்த நடிகரும், எம்.பி.யுமான வினோத் கன்னா ஆகியோருக்கு இரு அவைகளிலும் இரங்கல் தெரிவிக்கப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து, இரு அவை அலுவல்களும் ஒத்தி வைக்கப்படும். வேறு அலுவல்கள் எதுவும் நடைபெறாது.
இந்தக் கூட்டத் தொடரில், காஷ்மீர் விவகாரம், சீனாவுடன் ஏற்பட்ட தகராறு, ஜிஎஸ்டி வரி விவகாரம், விவசாயிகள் பிரச்னை, பாகிஸ்தான் தொடர்பான மத்திய அரசின் கொள்கை, பிரதமரின் இஸ்ரேல் பயணம், உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு விவகாரம் போன்றவற்றை எழுப்புவதற்கு எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. சில எதிர்க்கட்சிகள், இறைச்சிக்கு கால்நடைகளை விற்பனை செய்வதற்கு தடை விதித்து, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருக்கும் விவகாரத்தை எழுப்பி, அதுதொடர்பாக மத்திய அரசின் விளக்கத்தைக் கோர முடிவு செய்துள்ளன. இதுகுறித்து எதிர்க்கட்சி மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், "நாட்டில் சமூக நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள சில விவகாரங்கள் குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்த உள்ளோம்' என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா கூறுகையில், "பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் நடத்தப்படும் தாக்குதல்களை தடுப்பதற்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளோம்' என்றார்.
எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள்: அதேநேரத்தில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மோட்டார் வாகனங்கள் (திருத்த) மசோதா உள்பட 20}க்கும் மேற்பட்ட முக்கிய மசோதாக்களை இரு அவைகளிலும் நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது. இதனால் அந்த மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஆக்கபூர்வமானதாகவும், பயனுடையதாகவும் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. இந்த கூட்டத் தொடரில், முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக எதிர்க்கட்சிகளுடன் நல்ல ஒத்துழைப்பு, தகவல் தொடர்பு இருப்பதை உறுதி செய்வோம். சில விவகாரங்கள் குறித்து விவாதங்கள் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கேட்டுக் கொண்டால், அலுவல் ஆய்வுக் குழுவில் அதுகுறித்து விவாதிப்போம். அதன்பிறகு, அந்த விவகாரம் எப்போது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து அவைத் தலைவர் முடிவு செய்வார் என்றார் முக்தார் அப்பாஸ் நக்வி.
சீனாவின் தலையீடு குறித்து விவாதம்}காங்கிரஸ் கோரிக்கை: இதனிடையே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் குறித்து ஆலோசிக்க மத்திய அரசு சார்பில், தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்துக்குப் பிறகு, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத் செய்தியாளர்களிடம் பேசியபோது, காஷ்மீரில் சீனாவின் தலையீடு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்படும் என்றும், அதேநேரத்தில் நாட்டின் இறையாண்மை, தேசியப் பாதுகாப்பு ஆகிய விவகாரங்களில் மத்திய அரசுக்கு காங்கிரஸ் எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "காஷ்மீர் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அனைத்து கதவுகளையும் மத்திய அரசு அடைத்துவிட்டது. இதுதான், காஷ்மீர் பள்ளத்தாக்கில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு காரணம். காஷ்மீரில் நிலவும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டுவர துப்பாக்கிகள் உள்ளிட்டவைதான் ஒரே வழி என்று அரசு நினைத்தால், அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்காது' என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், "மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, பசுப் பாதுகாப்பு விவகாரம் போன்றவற்றை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எங்கள் கட்சி எழுப்பும்' என்றார்.
காங்கிரஸ் ஆலோசனை: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் செயல்பட வேண்டிய விதம் குறித்து காங்கிரஸ் கட்சி திங்கள்கிழமை கூடி ஆலோசிக்கவுள்ளது. இதேபோல், அனைத்து எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
சில முக்கிய பிரச்னைகளில், மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு எதிராக 18 எதிர்க்கட்சிகளும் முதல்முறையாக ஒருங்கிணைந்துள்ளன. இந்தச் சூழ்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com