பாதுகாப்புப் படைகளிடம் போதிய ஆயுதங்கள் உள்ளன

இந்தியப் பாதுகாப்புப் படைகளிடம் போதிய அளவில் ஆயுதங்களும், வெடிபொருள்களும் உள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
பாதுகாப்புப் படைகளிடம் போதிய ஆயுதங்கள் உள்ளன

இந்தியப் பாதுகாப்புப் படைகளிடம் போதிய அளவில் ஆயுதங்களும், வெடிபொருள்களும் உள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
போர் ஏற்பட்டால், 10 நாள்களுக்குத் தாக்குப் பிடிக்கும் அளவில் மட்டுமே இந்திய ராணுவத்திடம் ஆயுத வெடிபொருள்கள் இருப்பதாக இந்திய தலைமை கணக்கு தணிக்கைத் துறை (சிஏஜி) அண்மையில் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கடுமையான போரிலும் 40 நாள்களுக்குத் தாக்குப் பிடிக்கும் அளவுக்கு ஆயுத வெடிபொருள்கள் இருக்க வேண்டிய நிலையில், 152 வகையான வெடிபொருள்களில் 61 வகை பொருள்கள் 10 நாள்களிலேயே தீர்ந்துவிடும் அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த விவகாரத்தை செவ்வாய்க்கிழமை எழுப்பினார்கள்.
அவர்களுக்குப் பதிலளித்து, அருண் ஜேட்லி கூறியதாவது:
சிஏஜி அறிக்கையில், ஆயுத வெடிபொருள்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இருந்த பற்றாக்குறை பற்றியே குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், அதில் குறிப்பிட்டிருந்த காலத்துக்குப் பிறகு ஏராளமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆயுதங்கள், வெடிபொருள்கள் கொள்முதல் செய்வதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படுள்ளன.
ஆயுதங்கள், வெடிபொருள்களை வாங்குவதற்கான அதிகாரம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, நாட்டைப் பாதுகாக்கப் போதுமான அளவுஆயுதங்களும், வெடிபொருள்களும் இந்தியப் படைகளிடம் உள்ளன என்றார் அவர்.
எனினும், அருண் ஜேட்லியின் பதிலால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் திருப்தியடையவில்லை.
ஆயுத வெடிபொருள்களின் கொள்முதல் நடைமுறை சில நாள்களுக்கு முன்னர்தான் எளிமைப்படுத்தப்பட்டதாகவும், கடந்த 3 ஆண்டுகளாக இந்த விவகாரத்தில் பாஜக அரசு எதுவும் செய்யவில்லை எனவும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஆனந்த் சர்மா குற்றம் சாட்டினார்.
பாதுகாப்புத் துறைக்கு ஒரு முழு நேர அமைச்சரே இல்லை எனவும், இதற்கு முன்னர் அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் செயல்திறனற்றவராக இருந்தார் எனவும் அவர் கூறினார்.
இதுகுறித்து சமாஜவாதி கட்சி எம்.பி. ராம்கோபால் யாதவ் கூறுகையில், சீனாவுடன் போர்ப் பதற்றம் உருவாகியுள்ள சூழலில், 10 நாள் போரை மட்டுமே இந்தியா தாக்குப் பிடிக்கும் என்ற சிஏஜி அறிக்கை கூறியிருப்பது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பதாகத் தெரிவித்தார்.
2009-ஆம் ஆண்டிலும், 2013-ஆம் ஆண்டிலும் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது பாதுகாப்புத் துறை தொடர்பாக எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ரிபுன் போரா குற்றம் சாட்டினார்.
பாதுகாப்பு மேம்பாட்டுக்காக ரூ.16,500 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com