'இந்து சர்க்கார்' திரைப்படத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி: இன்று திரைக்கு வருகிறது

'இந்து சர்க்கார்' திரைப்படத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி: இன்று திரைக்கு வருகிறது

இந்தியாவில் கடந்த 1975-ஆம் ஆண்டிலிருந்து 1977-ஆம் ஆண்டு வரை அமலில் இருந்த நெருக்கடி நிலையை அடிப்படையாகக் கொண்ட 'இந்து சர்க்கார்' என்ற பாலிவுட் திரைப்படத்தைத் திரையிட உச்ச நீதிமன்றம்

இந்தியாவில் கடந்த 1975-ஆம் ஆண்டிலிருந்து 1977-ஆம் ஆண்டு வரை அமலில் இருந்த நெருக்கடி நிலையை அடிப்படையாகக் கொண்ட 'இந்து சர்க்கார்' என்ற பாலிவுட் திரைப்படத்தைத் திரையிட உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி வழங்கியது.

இதுதொடர்பாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மகனும், முன்னாள் எம்.பி.யுமான சஞ்சய் காந்தியின் மகள் என்றுக் கூறிக் கொள்ளும் பிரியா சிங் பால் என்பவர் தாக்கல் செய்த மனுவை, நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்ததையடுத்து, அந்தத் திரைப்படம் வெள்ளிக்கிழமை (ஜூலை 28) திரைக்கு வருகிறது. இதுகுறித்து நீதிபதிகள் அமித்வா ராய், ஏ.எம். கான்வில்கர் ஆகியோரும் அடங்கிய அந்த அமர்வு கூறியதாவது:

மனுதாரர் குற்றம் சாட்டியுள்ள திரைப்படத்தைப் பார்வையிட்ட வகையில், அந்தத் திரைப்படம் சட்ட வரம்புக்குள்பட்ட ஒரு கலைப் படைப்பு என்பது தெரிய வந்துள்ளது. எனவே, அந்தத் திரைப்படத்துக்குத் தடை விதிப்பதில் எந்த நியாயமும் இல்லை என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

முன்னதாக, மனுதாரர் பிரியா சிங் பால் சார்பாக வாதாடிய வழக்குரைஞர், 'இந்து சர்க்கார்' திரைப்படத்தில் உண்மைகள் திரித்துக் கூறப்பட்டிருப்பதாகவும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தும் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

பாலிவுட் இயக்குநர் மதூர் பண்டார்கர் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்துக்கு, காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக, மும்பை உயர் நீதிமன்றத்தில் பிரியா சிங் பால் தாக்கல் செய்திருந்த மனுவில், தான் இந்திரா காந்தியின் பேத்தி என்பதால், தனது மனுவை ஏற்று 'இந்து சர்க்கார்' படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

எனினும், சஞ்சய் காந்தியின் மகள் என்பதை பிரியா சிங் பால் நிரூபிக்கத் தவறியதால், அவரை இந்தத் திரைப்படத்தால் பாதிக்கப்பட்டவராகக் கருத முடியாது என இயக்குநர் மதூர் பண்டார்கரின் வழக்குரைஞர்கள் வாதாடினர். அந்த வாதத்தை ஏற்று மும்பை உயர் நீதிமன்றம் பிரியா சிங் பாலின் மனுவை தள்ளுபடி செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com