உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அண்மையில் நடத்தப்பட்ட சட்டப் பேரவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட 14 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சிகளின் சவாலுக்காக தேர்தல் ஆணையம் தில்லிக்கு கொண்டுவந்துள்ளது.
இந்த 3 மாநிலங்கள் மட்டுமல்லாமல் கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கும் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஒரு குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு சாதகமாக வாக்குப் பதிவாகும் வண்ணம் முறைகேடு செய்யப்பட்டதாக ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின.
ஆனால், இத்தகைய குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக நிராகரித்தது.
மேலும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியுமா? என்பதை வரும் 3-ஆம் தேதி நிரூபித்துக் காட்டுமாறு குற்றம்சாட்டிய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சவால் விடுத்துள்ளது.
அந்த சவாலை ஏற்பதாக தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.
இந்நிலையில், இந்த சோதனைக்காக உத்தரப் பிரதேச மாநிலம், கௌதம புத்தா நகர், காஸியாபாத் ஆகிய நகரங்களிலிருந்தும், பஞ்சாப் மாநிலம், பதிண்டா, பாட்டியாலா ஆகிய நகரங்களிலிருந்தும், உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் இருந்தும் 14 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தில்லிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இதுகுறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது:
இந்த இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்பதை 4 மணி நேரத்துக்குள் நிரூபிக்க வேண்டும். சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இரண்டு கட்சிகளுக்கும் தனித்தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தலா ஒரு கட்சிக்கு 4 வாக்குப் பதிவு இயந்திரங்கள் அளிக்கப்படும். அந்த இயந்திரங்களை இரண்டாகப் பிரிக்கலாம்.
சட்டப் பேரவைத் தேர்தல் சமயத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் எண்ணப்பட்ட முடிவுகள் அந்த இயந்திரங்களின் சேமிப்பு பகுதியில் அப்படியே உள்ளன. முதலில் அந்த முடிவுகளை அரசியல் கட்சிகள் மாற்றிக் காட்ட வேண்டும்.
அந்த முடிவுகளை மாற்றுவதற்கு செல்லிடப்பேசி, ப்ளூடூத் போன்ற உபகரணங்களை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல், அந்த இயந்திரங்களில் தேர்தலுக்கு முன்போ அல்லது தேர்தல் நடைபெற்ற தினத்தன்றோ முறைகேடு செய்யப்பட்டது என்பதையும் நிரூபிக்க வேண்டும்.
ஒருவேளை இந்த முயற்சி மேற்கொள்ளப்பட முடியாமல் இயந்திரங்கள் செயல்பாட்டை நிறுத்திக் கொண்டுவிட்டால் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.