/

மிதிவண்டியைப் பயன்படுத்துங்கள்: வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்

வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் மிதிவண்டி பயன்பாட்டுக்கு அனைவரும் மாற வேண்டும் என்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:41 pm

DIN

வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் மிதிவண்டி பயன்பாட்டுக்கு அனைவரும் மாற வேண்டும் என்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினார்.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றபோது செய்தியாளர்களிடம் அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
கார் போன்ற வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இது மிகப் பெரிய பிரச்னையாகும். தில்லியில் மட்டும் ஒரு கோடி வாகனங்கள் உள்ளன. அதைத் தொடர்ந்து மும்பையிலும் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை சாலைகளில் காண முடிகிறது. புகையை வெளியிடும் வாகனங்களால் நகரங்கள் மாசடைந்து நரகங்களாகி வருகின்றன. இதைத் தவிர்க்க, அனைவரும் மிதிவண்டியைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்பட வேண்டும். சாலைகளில் மிதிவண்டியில் செல்பவர்களுக்கென்று தனியாக ஒரு பாதை அமைக்கப்பட வேண்டும். குறிப்பாக விரிவடைந்துவரும் நகரங்களில் இத்தகைய தனிப்பாதை இருக்க வேண்டியது கட்டாயம். தனியாக நடைபாதையும் இருக்க வேண்டியது அவசியம். இன்றைய நவீன கால வாழ்க்கையில் உடல் உழைப்பு என்பது தேவையில்லாத ஒன்றாகிப் போய்விட்டது. இதன்காரணமாக பலர் உடல்நலப் பாதிப்புக்குள்ளாகின்றனர். மிதிவண்டியைப் பயன்படுத்தும்போது சிறந்த உடற்பயிற்சி செய்த பலனை பெறலாம் என்றார் வெங்கய்ய நாயுடு.
என்டிடிவி சேனலில் சோதனை நடக்கவில்லை-நாயுடு: இதனிடையே, என்டிடிவி சேனலில் சிபிஐ சோதனை நடைபெறவில்லை என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
தில்லியில் நிகழ்ச்சியொன்றில் புதன்கிழமை பங்கேற்ற அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
என்டிடிவி சேனலில் சிபிஐ சோதனை நடைபெறவில்லை. அந்தச் சேனல் சம்பந்தப்பட்ட எந்தவொரு அலுவலகங்களிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தவில்லை. இதுதொடர்பாக வெளிவரும் குற்றச்சாட்டுகளுக்கு என்டிடிவி நிர்வாகம் பதிலளிக்க வேண்டும்.
பாஜக தலைமையிலான மத்திய அரசு சிபிஐயை தவறாகப் பயன்படுத்துவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. அக்கட்சி இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது எனக்கு வியப்பளிக்கிறது என்றார் வெங்கய்ய நாயுடு.
ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.48 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் என்டிடிவி நிறுவனர் பிரணாய் ராய் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை நடத்தினர். இதற்கு எதிர்க்கட்சிகள், பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா உள்ளிட்ட செய்தித் துறை சார்ந்த சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.