வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

மக்களின் உணவுப் பழக்கத்தை மாற்றுவது அரசின் நோக்கமல்ல: மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அமைச்சர் விளக்கம்

மக்களின் உணவுப் பழக்கத்தை மாற்ற வேண்டும் என்பதோ, வர்த்தக நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதோ அரசின் நோக்கமல்ல என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்

News image
Updated On :13 ஜூன் 2017, 7:18 pm

மக்களின் உணவுப் பழக்கத்தை மாற்ற வேண்டும் என்பதோ, வர்த்தக நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதோ அரசின் நோக்கமல்ல என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக் கூடாது என்று மத்திய அரசு பிறப்பித்த உத்தரவால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இத்தகைய விளக்கத்தை அவர் அளித்துள்ளார்.
பசு, எருது, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக் கூடாது என்று மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது.
மேலும், மாடுகளை வேளாண் சார்ந்த நடவடிக்கைகளுக்காக மட்டுமே பரஸ்பரம் விற்பனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அதுதொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த உத்தரவானது நாடு முழுவதும் கடுமையான விமர்சனங்களுக்கு வித்திட்டது. மத்திய அரசின் இந்த முடிவு, தனிமனித உரிமைகளைப் பறிக்கும் செயல் என்றும் குற்றம்சாட்டப்பட்டது. கேரள அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் தடையை மீறி மாட்டிறைச்சி திருவிழாவையும் நடத்தியது.
இதனிடையே, மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக கேரளம் மற்றும் மேகாலய சட்டப் பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் செய்தியாளர்களிடம் தில்லியில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்தே இறைச்சிக்காக மாடுகளை விற்கக் கூடாது என்ற விதிகளை மத்திய அரசு வரையறுத்தது. இதுதொடர்பான அறிவிக்கையும் வெளியிடப்பட்டது.
அதில் சில திருத்தங்களை மேற்கொள்ளுமாறு பல்வேறு ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டன. அவை பரிசீலிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் சில அம்சங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதுபோன்று நியாயமான கோரிக்கைகளோ அல்லது ஆலோசனைகளோ இருந்தால் அதனை மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தலாம். அதுகுறித்து ஆய்வு செய்யப்படும். தற்போது இந்த உத்தரவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த விவகாரத்தைப் பொருத்தவரை மக்களின் உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றோ, வர்த்தக நடவடிக்கைகளைப் பாதிப்புக்குள்ளாக்க வேண்டும் என்றோ திட்டம் வகுத்து இந்நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.