கோவாவிலும் பாஜக ஆட்சி! முதல்வராகிறார் மனோகர் பாரிக்கர்

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களைத் தொடர்ந்து கோவாவிலும் பாஜக ஆட்சியமைக்கிறது.
கோவாவிலும் பாஜக ஆட்சி! முதல்வராகிறார் மனோகர் பாரிக்கர்
Published on
Updated on
2 min read

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களைத் தொடர்ந்து கோவாவிலும் பாஜக ஆட்சியமைக்கிறது. கோவா அரசியலில் திடீர் திருப்பமாக ஆளுநரை சந்தித்து பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரியது. அதை ஏற்றுக் கொண்டு மனோகர் பாரிக்கரை கோவா முதல்வராக அந்த மாநில ஆளுநர் மிருதுளா சின்ஹா ஞாயிற்றுக்கிழமை நியமித்தார்.
மேலும், 15 நாள்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோவா சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்றது. ஆளும் பாஜக 13 இடங்களில் வென்றது. பாஜகவின் முன்னாள் கூட்டணி கட்சியான மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி (3), கோவா ஃபார்வர்டு கட்சி (3) ஆகியவை 6 தொகுதிகளில் வெற்றி பெற்றன. சுயேச்சைகள் 3 இடங்களில் வென்றனர். தேசியவாத காங்கிரஸ் கட்சி ஓரிடத்தில் வெற்றி பெற்றது. 3 சுயேச்சைகளில் ஒருவர் பாஜக ஆதரவாளர் ஆவார்.
கோவா தேர்தலில் அதிக இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றபோதும், மாநிலத்தில் ஆட்சியமைக்கத் தேவையான 21 இடங்கள் அக்கட்சியிடம் இல்லை. எனினும், பிற கட்சிகளின் ஆதரவை பெறும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டது.
இந்நிலையில், 3 தொகுதிகளில் வெற்றி பெற்ற மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி (எம்ஜிபி), முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரை முதல்வர் பதவிக்கு பாஜக முன்மொழிந்தால் அக்கட்சி ஆட்சியமைக்க ஆதரவு அளிக்கத் தயாராக இருப்பதாக அறிவித்தது.
இதேபோல், கோவா ஃபார்வர்டு கட்சியும் பாஜகவுடன் திடீர் பேச்சுவார்த்தை நடத்தியது. முதலில், பாஜக, காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளும் தங்களது கட்சியுடன் கூட்டணியமைப்பது தொடர்பாக மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அக்கட்சி தெரிவித்தது. எனினும், பாஜக தலைவர்களுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை அக்கட்சி அதிகாரப்பூர்வமானபேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அப்போது பாஜகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பான கடிதத்தை அக்கட்சி அளித்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம், பனாஜியில் உள்ள பாஜக தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், கோவா சட்டப் பேரவைக் கட்சித் தலைவராக மனோகர் பாரிக்கரை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா நியமிக்க வேண்டுமென வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆளுநருடன் சந்திப்பு: இந்நிலையில், பனாஜியில் மனோகர் பாரிக்கர், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து ஆளுநர் மிருதுளா சின்ஹாவை மனோகர் பாரிக்கர் தலைமையில் பாஜக தலைவர்கள் நேரில் சென்று சந்தித்தனர்.
அப்போது கோவாவில் பாஜக எம்எல்ஏக்கள் 13 பேருடன் சேர்த்து 22 எம்எல்ஏக்களின் ஆதரவு தங்கள் கட்சிக்கு இருப்பதாகவும், எனவே மாநிலத்தில் ஆட்சியமைக்க தங்கள் கட்சிக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர். மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி (3), கோவா
ஃபார்வர்டு கட்சி (3), தேசியவாத காங்கிரஸ் (1) சுயேச்சைகள் (2) ஆகியோரது ஆதரவு கடிதத்தையும் அளித்தனர்.
பாதுகாப்பு அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்கிறார் பாரிக்கர்: கோவா முதல்வராக பதவியேற்க வசதியாக பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியை மனோகர் பாரிக்கர் விரைவில் ராஜிநாமா செய்யவுள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தபோது, கோவா முதல்வராக பதவியேற்பதற்கு முன்பு பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியை பாரிக்கர் ராஜிநாமா செய்வார் என்றார்.
கோவா ஃபார்வர்டு கட்சித் தலைவர் விஜய் சர்தேசாய் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கோவாவில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காகவே பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளோம்; நிலையற்ற தன்மையால் மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படுவதை எங்கள் கட்சி விரும்பவில்லை' என்றார்.
மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சித் தலைவர் சுதின் தவாலிகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மனோகர் பாரிக்கருக்காகவே பாஜகவிடம் ஆதரவு கடிதத்தை எங்களது கட்சி அளித்துள்ளது; அவர் இல்லையெனில், பாஜக அடுத்து ஆட்சியமைக்க எங்களது கட்சி ஆதரவு கடிதம் அளித்திருக்காது' என்றார்.
வாழ்க்கை வரலாறு: 61 வயதாகும் மனோகர் பாரிக்கர், கோவா முதல்வராக இதற்கு முன்பு 3 முறை பதவி வகித்துள்ளார். முதல்முறையாக கடந்த 2000-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை முதல்வராக இருந்தார். 2-ஆவது முறையாக கடந்த 2002-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2005-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலும் கோவா முதல்வராக பதவி வகித்தார்.
இதனிடையே, கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் பாரிக்கர் தலைமையில் போட்டியிட்ட பாஜக கூட்டணி 24 இடங்களில் வெற்றி பெற்று மாநிலத்தில் ஆட்சியமைத்தது.
எனினும், 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியமைக்கவே, பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று மத்திய அரசியலுக்கு பாரிக்கர் சென்றார். அவருக்கு மத்திய அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சகம் அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com