

சென்னை: மே 1ம் தேதி சர்வதேச உழைப்பாளர் தினம் உலக அளவில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மே 1ம் தேதி பல்வேறு திட்டங்கள் நடைமுறைக்கு வரும் நாளாக சிறப்புப் பெற்றுள்ளது.
அதாவது, மனை வணிகச் சட்டம், குழந்தைகளைத் தத்தெடுப்பதற்கான புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
மேலும், பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறை சோதனை அடிப்படையில் இந்தியாவின் 5 நகரங்களில் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதில்லாமல், புதுச்சேரியில் கட்டாய ஹெல்மெட் சட்டம் இன்று முதல் முறைக்கு வந்துள்ளது.
அது பற்றிய ஒரு பார்வை..
வீடு மற்றும் மனைகள் விற்பனையில் நடைபெறும் முறைகேடுகளை தடுப்பதற்காக இயற்றப்பட்ட மனை வணிகச் சட்டம், மே 1 முதல் அமலுக்கு வருகிறது.
எனினும், இந்தச் சட்டத்தை ஏற்று இதுவரை 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மட்டுமே அறிவிக்கை வெளியிட்டுள்தால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்தச் சட்டம் அமல்படுத்தப்படுவது கேள்விக்குறியாகியுள்ளது.
மனை வணிகச் சட்ட அமலாக்கம் குறித்து மத்திய வீட்டுவசதி - நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறை அமைச்சர் எம். வெங்கய்ய நாயுடு கூறியதாவது:
ஒன்பது ஆண்டு கால காத்திருப்புக்குப் பிறகு, மனை வணிக ஒழுங்குமுறைச் சட்டம் திங்கள்கிழமை அமலுக்கு வருகிறது.
இதன் மூலம், வீட்டு மனை விற்பனைத் துறையில் "வாடிக்கையாளரே அரசர்" என்ற நிலையை ஏற்படுத்தும் ஒரு புதிய சகாப்தம் பிறக்கிறது.
வீடு மனை வாங்குவதில் வாடிக்கையாளரின் தன்னம்பிக்கை அதிகரித்து, தேவையும் அதிகரிக்கும் என்பதால், இந்தச் சட்ட அமலாக்கத்தின் மூலம் விற்பனையாளர்களும் பலனடைவர் என்றார் அவர்.
இந்தச் சட்டம் அமலாவதைத் தொடர்ந்து, தற்போது கட்டுமான நிலையில் இருக்கும் வீட்டு மனைத் திட்டங்களை 3 மாதங்களுக்குள் மனை வணிக ஒழுங்காற்று அதிகாரிகளிடம் விற்பனையாளர்கள் பதிவு செய்ய வேண்டும்.
எனினும், தற்போது உத்தரப் பிரதேசம், குஜராத், ஒடிஸா, ஆந்திரப் பிரதேசம்... வீடு வாங்குவோர் கவனத்துக்கு...
அதோடு,
"குழந்தைகளைத் தத்தெடுக்க விரும்பும் பெற்றோர் இனி பல குழந்தைகளில் இருந்து ஒரு குழந்தையைத் தேர்ந்தெடுக்க முடியாது. தாங்கள் அளிக்கும் குழந்தையை பெற்றோர்களால் ஏற்கவோ, மறுக்கவோ மட்டுமே முடியும்' என்று தேசிய தத்தெடுப்பு வள ஆணையம் (சிஏஆர்ஏ) தெரிவித்துள்ளது.
தற்போது வரை "கேரிங்ஸ்' என்ற மத்திய அரசின் தத்தெடுப்பு தொடர்பான இணையதளத்தில் பதிவு செய்துள்ள பெற்றோருக்கு மூன்று குழந்தைகள் பரிந்துரைக்கப்படுவதும் அவற்றில் இருந்து ஒன்றை அவர்கள் ஏற்றுக் கொள்வதும் வழக்கமாக உள்ளது.
இந்த நடைமுறைக்குப் பதிலாக, தத்தெடுத்தல் தொடர்பான புதிய விதிமுறை திங்கள்கிழமை (மே 1) முதல் அமலுக்கு வருகிறது. தத்தெடுப்போர் கவனத்துக்கு...
புதுச்சேரியில் இன்று,
புதுச்சேரியில் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற விதிமுறை இன்று நடைமுறைக்கு வந்தது. போக்குவரத்து போலீஸார் முக்கிய சந்திப்புகளில் வாகனச் சோதனை மேற்கொண்டனர்.
புதுச்சேரியில் மொத்த மக்கள் தொகை 13 லட்சமாகும். ஆனால் வாகனங்கள் எண்ணிக்கை 8 லட்சத்துக்கு மேல் உள்ளது. இதில் பெரும்பாலானவை இரு சக்கர வாகனங்களாகும். ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் 200 பேர் உயிரிழந்து வருகின்றனர்.
இதில் தலைக்கவசம் இல்லாமல் உயிரிழக்கும் வாகன ஓட்டிகளே அதிகம் என்பதால், புதுச்சேரி மாநிலத்தில் (மே-1) முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி கடந்த பிப்ரவரி மாதம் தெரிவித்தார். இது பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு...
பெட்ரோல்-டீசல் தினசரி விலை நிர்ணய முறை, இந்தியாவில் புதுச்சேரி உட்பட 5 நகரங்களில் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
சர்வதேச கச்சா எரிபொருள் சந்தை விலைக்கு ஏற்ப நாள்தோறும் பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை, சோதனை ரீதியில் புதுவை உள்பட 5 நகரங்களில் மே 1-ஆம் தேதி முதல் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்தது.
அதன்படி, புதுச்சேரியில் நாள்தோறும் பெட்ரோல்-டீசல் விலை நள்ளிரவு 12 மணிக்கு மாறும். பெட்ரோலிய நிறுவனங்கள் விலை விவரங்களை அறிவிக்கும்.
அதன்படி ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மே 1-க்கான (திங்கள்கிழமை) மாற்றியமைக்கப்பட்ட பெட்ரோல் விற்பனை விலை (லிட்டருக்கு) ரூ.66.05. மாற்றியமைக்கப்பட்ட டீசல் விலை ரூ.58.70. (மேலும் முக்கிய தகவல்களை அறிய..)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.