போலி பான் அட்டைகளைத் தவிர்க்க ஆதார் கட்டாயம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்
போலி பான் அட்டைகளைத் தவிர்ப்பதற்காகவே ஆதார் அட்டைகளைக் கட்டாயமாக்கும் முடிவை எடுத்துள்ளதாக மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


போலி பான் அட்டைகளைத் தவிர்ப்பதற்காகவே ஆதார் அட்டைகளைக் கட்டாயமாக்கும் முடிவை எடுத்துள்ளதாக மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் மற்றும் 2017-நிதிச் சட்டம் ஆகியவற்றின் மூலம் வருமான வரிச் சட்டத்தில் 139 ஏஏ என்ற பிரிவு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தப் பிரிவானது, வரும் ஜூலை 1 முதல், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவும், பான் அட்டை கோரி விண்ணப்பிப்பதற்கும் ஆதார் எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயம் என்று கூறுகிறது.
இந்தப் பிரிவு சட்டரீதியாக செல்லுபடியாகத் தக்கதல்ல என்று கூறி, உச்ச நீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் ஷியாம் திவான் ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
வருமான வரிச் சட்டத்தின் 139 ஏஏ பிரிவானது அரசியல்சட்டத்துக்கு எதிரானது. ஆதார் சட்டத்துக்கும் இது நேர் எதிராக உள்ளது. ஆதார் எண்ணை அளிக்க ஒருவர் தனது ஒப்புதலைத் தருவதற்கு கட்டாயப்படுத்தும் கேள்விக்கே இடமில்லை. இந்த விவகாரமானது இந்தியக் குடியரசுக்கும், அதன் குடிமக்களுக்குமான உறவையே மாற்றியமைக்கிறது.
சட்டத்துக்கு கட்டுப்பட்ட ஒரு குடிமகன் தனது வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும்போது ஆதார் எண்ணைத் தருமாறு கட்டாயப்படுத்தப்பட முடியாது. ஆதார் எண் கட்டாயம் என்பது குடிமக்களின் கழுத்தில் மின்னணு முறையில் கட்டப்படும் தோல் வார் (வளர்ப்புப் பிராணிகளுக்கு கட்டப்படும் வார் போன்றது) போல் உள்ளது.
ஏனெனில், ஆதார் மூலம் அரசு தனது குடிமக்களைக் கட்டுப்படுத்த இயலும். ஒரு நபரை வாரம் முழுவதும் 24 மணிநேரமும் கண்காணிக்கக் கூடிய பயோமெட்ரிக் முறை உலகின் எந்தப் பகுதியிலும் இல்லை. குடிமக்களுக்கு விவரம் தெரியும் வயது வருவதற்கு முன்பாகவே அவர்கள் (அரசு) இதைச் செய்கின்றனர் என்று அவர் வாதிட்டார்.
அண்மையில் இந்த மனுக்கள் மீதான விசாரணையின்போது, நீதிபதிகள் குறுக்கிட்டு, 'பான் அட்டை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்ற அரசின் முடிவை எம்.பி.க்கள் ஏன் எதிர்க்கவில்லை?' என்று கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், மேற்கண்ட மனுக்கள் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது அரசுத் தரப்பில் தலைமை சட்ட ஆலோசகர் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிட்டார். அவர் கூறியதாவது:
பான் அட்டைகளுக்கான மென்பொருள் சந்தேகத்துக்கு வழிவகுக்கக் கூடியதாக உள்ளது. போலி பான் அட்டைகளை உருவாக்க முடிகிறது. ஆனால், ஆதார் முறையானது மிகவும் பாதுகாப்பானதாகவும், வலுவானதாகவும் உள்ளது. இதனால், தனிநபர் ஒருவரின் அடையாளத்தை போலியாக உருவாக்க முடியாது.
ஆதார் நடைமுறை காரணமாக, ஏழைகளுக்கான பல்வேறு திட்டங்கள் மற்றும் ஓய்வூதியத் திட்டங்களில் அரசு ரூ.50,000 கோடி வரை மிச்சப்படுத்தியுள்ளது. முறைகேடுகள் காரணமாக இதுவரை 10 லட்சம் பான் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை வழங்கப்பட்ட 113.7 கோடி ஆதார் அட்டைகளில் போலி அட்டை வெளியானதாக அரசுக்கு எந்தத் தகவலும் வரவில்லை.
பயங்கரவாதத்துக்கு நிதி அளிப்பது, கருப்புப் பணப் புழக்கம் ஆகிய அச்சுறுத்தல்களைத் தடுக்க திறன்வாய்ந்த கருவியாகவும் ஆதார் விளங்குகிறது. மேலும், பான் அட்டைக்கு விண்ணப்பிப்பதற்கு ஆதார் கட்டாயம் என்பது ஜூலை 1-ஆம் தேதிக்கு முன்பே அமலுக்கு வரும் என்று 139 ஏஏ பிரிவில் எங்குமே குறிப்பிடப்படவில்லை என்று முகுல் ரோத்தகி வாதிட்டார். அவரது வாதத்தை உச்ச நீதிமன்றம் புதன்கிழமையும் (மே 3) விசாரிக்க உள்ளது.
முன்னதாக, போலி நிறுவனங்களுக்கு பணத்தைத் திருப்பி விடுவதற்காக போலி பான் அட்டைகள் பயன்படுத்தப்பட்டதாக மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...