பாகிஸ்தானுடனான கிரிக்கெட்: மத்திய அரசு அனுமதி மறுப்பு

பாகிஸ்தானுடனான இருதரப்பு கிரிக்கெட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காது என்று விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் கூறினார்.
பாகிஸ்தானுடனான கிரிக்கெட்: மத்திய அரசு அனுமதி மறுப்பு

பாகிஸ்தானுடனான இருதரப்பு கிரிக்கெட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காது என்று விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் கூறினார்.
இருதரப்பு கிரிக்கெட் போட்டிகள் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய(பிசிசிஐ) அதிகாரிகள் துபையில் பேச்சு நடத்தும் நிலையில், மத்திய அமைச்சர் விஜய் கோயல் இவ்வாறு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
இந்தியாவின் மீதான எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ளும் வரையில், அந்நாட்டுடனான இருதரப்பு கிரிக்கெட் விளையாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காது.
இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் எந்தவொரு வாக்குறுதியும் கொடுப்பதற்கு முன்பாக பிசிசிஐ மத்திய அரசிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.
எனினும், ஐசிசியின் சர்வதேச போட்டிகளின்போது இருநாடுகளும் விளையாடுவது தொடர்பாக நாங்கள் ஏதும் கூற விரும்பவில்லை என்று விஜய் கோயல் தெரிவித்தார்.
இதனிடையே, துபையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளை பிசிசிஐ இணைச் செயலர் அமிதாப் செளதரி தலைமையிலான அதிகாரிகள் சந்தித்தனர். அப்போது, மத்திய அரசின் அனுமதி இல்லாமல் இருதரப்புத் தொடரை நடத்த இயலாது என்பதை அவர்களிடம் விளக்கினர்.
மேலும், பிசிசிஐக்கு எதிரான வழக்கை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தினர். எனினும், இந்தக் கூட்டத்தில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கூட்டம் தொடர்பாக பிசிசிஐ இணைச் செயலர் அமிதாப் சௌதரி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரிகளும், பாகிஸ்தான் கிரிகெட் வாரிய அதிகாரிகளும் துபையில் சந்தித்து, தங்கள் தரப்பு நிலைப்பாட்டை பகிர்ந்து கொண்டனர். இந்தச் சந்திப்பு சுமுகமான சூழ்நிலையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் எடுக்கப்படும் முடிவுகள் இருதரப்பு வாரியங்களின் உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தனது வழக்கை திரும்பப் பெறாத பட்சத்தில், பிசிசிஐ அதற்குரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டியிருக்கும். பாகிஸ்தானில் விளையாடச் சென்ற இலங்கை அணி மீதான பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாதுகாப்பு குறைபாடுகளைக் காரணமாகக் கூறி எந்தவொரு அணியும் பாகிஸ்தானுக்குச் சென்று கிரிக்கெட் விளையாடத் தயாராக இல்லை.
இதனால் நிதித் தட்டுப்பாட்டைச் சந்தித்து வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்தியாவுடனான இருதரப்பு தொடரைச் சார்ந்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, 2015-2023 காலகட்டத்துக்கு இடையே 5 தொடர்களை நடத்த வேண்டியுள்ளது. அந்த ஒப்பந்தத்தின்படி நடந்துகொள்ளவில்லை எனக் கூறி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சுமார் ரூ.387 கோடி இழப்பீடு கோரி பிசிசிஐக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com