மாட்டிறைச்சி விவகாரம்: அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டத்தை கூட்ட கேரள அரசு முடிவு

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கும், வாங்குவதற்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது தொடர்பாக ஆலோசிப்பதற்காக அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்ட

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கும், வாங்குவதற்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது தொடர்பாக ஆலோசிப்பதற்காக அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்ட கேரள அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலாவுடன் ஆலோசித்துவிட்டு, சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்டவும் அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
முன்னதாக, மாட்டிறைச்சி விவகாரத்தில் ஒன்றிணைந்து செயல்படுமாறு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டம் கூடியது. கூட்டம் நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்குத் தடை விதித்துள்ள மத்திய அரசின் முடிவு குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்து மாநில முதல்வர்களும் கூட வேண்டும். விரைவில் இந்தக் கூட்டத்துக்கான தேதி அறிவிக்கப்படும். மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கையை சட்டப்படி எதிர்கொள்வோம். எனினும், முதலில் இதுதொடர்பாக சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசனை நடத்த வேண்டியுள்ளது என்றார் பினராயி விஜயன்.
முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அவர் சில தினங்களுக்கு முன்பு அனுப்பியிருந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மாட்டிறைச்சி விவகாரத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்பு குரலைப் பதிவு செய்ய வேண்டும். மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கையானது ஜனநாயகத்துக்கும், கூட்டாட்சிக்கும், மதச்சார்பற்றதன்மைக்கும் எதிரானதாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com