சுடச்சுட

  

  ஜேசுதாஸ், ஜக்கி வாசுதேவ், சோ, பவாருக்கு பத்ம விருதுகள், கோலி, மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது

  By DIN  |   Published on : 26th January 2017 05:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  award

  பிரபல பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ், மறைந்த பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான சோ ராமசாமி, சத்குரு ஜக்கி வாசுதேவ், தமிழக தடகள வீரர் மாரியப்பன், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது.
  குடிமக்களுக்கான தலைசிறந்த விருதாக பாரத ரத்னாவும் அதற்கு அடுத்த நிலை விருதுகளாக "பத்மவிபூஷண்', "பத்மபூஷண்', "பத்மஸ்ரீ' ஆகியவையும் விளங்குகின்றன. இதில் தலா ஏழு பத்மவிபூஷண், பத்மபூஷண், 75 பத்மஸ்ரீ விருதுகள் பெற தகுதிவாய்ந்தவர்களின் பெயர் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
  பத்மவிபூஷண்: "பத்ம விபூஷண்' விருதுக்கு பிரபல பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் (இசை), சத்குரு ஜக்கி வாசுதேவ் (ஆன்மிகம்), தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி (பொது விவகாரம்), செயற்கைக்கோள் விஞ்ஞானி உடுப்பி ராமசந்திர ராவ் (அறிவியல்), மறைந்த தலைவர்களான மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வர் சுந்தர் லால் பட்வா, மக்களவை முன்னாள் தலைவர் பி.ஏ.சங்மா (பொது விவகாரம்) ஆகியோர் பத்மவிபூஷண் விருதுக்கு தகுதி பெற்றுள்ளனர். இதில் ஜக்கி வாசுதேவ் தமிழகத்தை தலைமையிடமாகக் கொண்டுள்ள ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஆவார்.
  பத்மபூஷண்: "பத்மபூஷண்' விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த சோ ராமசாமி தகுதி பெற்றுள்ளார். இலக்கியம், கல்வி, இதழியல் பிரிவில் சோ ராமசாமி தேர்வாகி உள்ளார்.
  இதேபோல, ஹிந்துஸ்தானி இசைக் கலைஞர் விஸ்வ மோகன் பட், சம்ஸ்கிருத அறிஞர் தேவி பிரசாத் துவிவேதி, ஜைன மத குரு ரத்ன சுந்தர் மகராஜ், யோகா நிபுணர் சுவாமி நிரஞ்சனா நந்த சரஸ்வதி, லேப்ரோஸ்கோபி அறுவை சிகிச்சையின் தந்தை என்றழைக்கப்படும் மருத்துவர் டெஹம்டான் உத்வாடியா, தாய்லாந்து இளவரசி மஹா சக்ரி ஷிரிந்தோர்ன் ஆகியோரும் பத்மபூஷண் விருதுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
  பத்மஸ்ரீ: "பத்மஸ்ரீ' விருது பெறும் பட்டியலில் கடந்த ஆண்டு பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீரர் மாரியப்பன், மிருதங்க கலைஞர் டி.கே.மூர்த்தி, பிரான்ஸ் நாட்டில் பிறந்து இந்தியாவில் குடியுரிமை பெற்று தமிழகத்தில் வசித்து இலக்கியப் பணியாற்றி வரும் மிஷெல் டேனினோ, சமூக சேவகர் நிவேதிதா ரகுநாத், எய்ட்ஸ் நோய் பாதிப்பை இந்தியாவில் கண்டுபிடித்த முதலாவது மருத்துவராகவும் ஆராய்ச்சியாளராகவும் திகழ்ந்த மறைந்த சுனிதி சாலமன், தமிழகத்தில் பிறந்து ஹரியாணாவில் குடியேறியுள்ள மக்களவையின் முன்னாள் செகரட்டரி ஜெனரல் டி.கே.விஸ்வநாதன் ஆகியோர் பத்மஸ்ரீ விருதுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
  இந்த வரிசையில், கன்னட திரைப்பட நடிகை பாரதி விஷ்ணுவர்தன், கேரளத்தைச் சேர்ந்த பாடகி பிரஸ்ஸால பொன்னம்மாள், ஹிந்தி திரைப்பட பாடகி அனுராதா போட்வால், குஜராத்தை சேர்ந்த திரைப்பட பாடகர் புருஷோத்தம் உபாத்யாய், திரிபுராவைச் சேர்ந்த சர்வதேச ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர், குண்டு எறிதல் வீராங்கனை தீபா மாலிக், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், வட்டு எறிதல் வீரர் விகாஸ் கௌடா, இந்திய ஹாக்கி அணித் தலைவர் ஸ்ரீஜேஷ், பத்திரிகையாளரும் திரை விமர்சகருமான பாவனா சோமய்யா, விஷ்ணு பாண்டியா, கேரளத்தைச் சேர்ந்த தற்காப்புக் கலை வீராங்கனை மீனாட்சியம்மா, தொல்லியல் ஆய்வாளர் மறைந்த அசோக் குமார், வெளிநாடு வாழ் இந்தியர்களான இசை கலைஞர் இம்ரத் கான், ஆனந்த் அகர்வால், ஹெச்.ஆர்.ஷா உள்ளிட்டோரும், நேபாளத்தைச் சேர்ந்த சமூக சேவகர் அனுராதா கொய்ராலா உள்பட மொத்தம் 75 பேர் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியுள்ளனர்.
  விருது எப்போது? "வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் இரு பிரிவுகளாக மேற்கண்டவர்களுக்கு பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்வில் வழங்குவார்' என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai