பல்வேறு வங்கிகளில் ரூ.2,654 கோடி கடன் முறைகேடு செய்ததாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மின் சாதனங்கள் தயாரிப்பு நிறுவனம் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்ததுள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.
ஏற்கெனவே, நீரவ் மோடியின் நிறுவனம் பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி, ரோட்டோமேக் நிறுவனத்தின் வங்கிக் கடன் மோசடி , கனிஷ்க் நிறுவன கடன் மோசடி உள்ளிட்டவை தேசிய அளவில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்பட்டுத்தியுள்ள நிலையில், இப்போது மேலும் ஒரு நிறுவனம் கடன் மோசடியில் சிக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் வதோதரா நகரில் செயல்பட்டு வரும் டைமண்ட் பவர் இன்பிராஸ்டிரக்சர் நிறுவனம் (டிபிஐஎல்), மின்சார வயர் உள்ளிட்ட மின் சாதனங்களை தயாரித்து வருகிறது. கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் பொதுத் துறை மற்றம் தனியார் வங்கிகள் என மொத்தம் 11 வங்கிகளின் அந்த நிறுவனம் கோடிக்கணக்கில் கடன் பெற்றுள்ளது. இது தவிர, வங்கிகளிடம் கடன் பொறுப்பேற்பு கடிதங்களையும் டிபிஐஎல் நிறுவனம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளது. 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அந்த நிறுவனம் வங்கிக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தொகை ரூ.2,654.40 கோடியாக அதிகரித்தது. கடன் திரும்பி வராததால் வங்கிகள் அவற்றை வாராக்கடனாக அறிவித்தன.
இந்நிலையில், இது தொடர்பாக அந்த நிறுவனத்துக்கு கடன் கொடுத்த வங்கிகள் சார்பில் சிபிஐ-யில் புகார் தெரிவிக்கப்பட்டது. முதல் கட்ட விசாரணையில் அந்த நிறுவனம் தனது லாபத்தை பொய்யாக அதிகரித்து காட்டி, பல்வறு போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடன் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து, டிபிஐஎல் நிறுவனத்தின் தலைவர் எஸ்.என். பட்னாகர், அவரது மகன்களும், நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பு வகித்தவர்களுமான அமித் பட்னாகர், சுமித் பட்னாகர் ஆகியோர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். வதோதராவில் உள்ள அவர்களது அலுவலகம், வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
டிபிஐஎல் நிறுவனத்துக்கு பாங்க் ஆஃப் இந்தியா ரூ.348.99 கோடியும், ஐசிஐசிஐ வங்கி ரூ.279.46 கோடியும், பாங்க் ஆஃப் பரோடா ரூ.348.99 கோடியும் கடன்அளித்துள்ளன. இந்த கடன் முறைகேட்டில் வங்கி அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







