

புதுதில்லி: ஓரினச்சேர்க்கையை குற்றம் என அறிவிக்கும் சட்டப்பிரிவை நீக்க கோரும் மனு தொடர்பான வழக்கில், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தகுந்த வயதை எய்திய இரு நபர்கள் பரஸ்பர சம்மதத்துடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது குற்றம் ஆகாது என கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை 2-ந் தேதி தில்லி உயர் நீதிமன்றம் வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் இந்திய தண்டனை சட்டம் 377-வது பிரிவின் படி ஓரினச்சேர்க்கை குற்றச்செயல் என 2013-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பினை எதிர்த்து ஹோட்டல் அதிபரான கேஷவ் சூரி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுவானது தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் திங்களன்று விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இதே விவகாரம் தொடர்பாக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுவோடு கேஷவ் சூரி தாக்கல் செய்த மனுவும் சேர்த்து விசாரிக்கப்படும் என்று தெரிவித்து வழக்கினை ஒத்தி வைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.