

இளைஞர்களின் இதயத்தில் ஜாதிய முத்திரையை பாஜக குத்தியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் காவலர் தேர்வுக்கு வந்தவர்கள் மார்பில் ஜாதிப் பிரிவை எழுதியதை சுட்டிக்காட்டி அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பான படத்தையும் தனது சுட்டுரை (டுவிட்டர்) பக்கத்தில் ராகுல் பதிவேற்றியுள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற காவலர் உடல் தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களின் மார்பில் எஸ்.சி., எஸ்.டி., என அவரவர் ஜாதிப் பிரிவுகளை எழுதியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் அரசமைப்புச் சட்டத்தை மீறி மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு செயல்பட்டுள்ளது. இளைஞர்களின் மார்பில் அவர்களது ஜாதிப்பிரிவை எழுதும் துணிவு இவர்களுக்கு எப்படி வந்தது. அரசுப் பணிக்காக வந்தவர்களின் உடலில் ஜாதி முத்திரையைப் பதிப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.
இந்தச் செயல் மூலம் அந்த மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பாஜக தனது ஜாதியவாதக் கொள்கையை தேசத்தின் இதயத்தில் எழுதுகிறது. இப்படி ஒரு முத்திரையை அனைவரிடத்திலும் பதிக்க வேண்டும் என்பதுதான் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் எண்ணம். இவைதான் முன்பு தலித்துகளை கோயிலில் அனுமதிக்காமல் இருந்தது. அவர்கள் உடலில் துடைப்பத்தைக் கட்டி அவமானப்படுத்தியது போன்ற செயல்களாக இருந்தன. இப்போது ஜாதியக் கொடுமைக்கு புது வடிவம் கொடுக்கிறார்கள் என்று ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கண்டனம்: இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே சுட்டுரையில் கூறியிருப்பதாவது:
காவலர் தேர்வுக்கு வந்தவர்கள் மார்பில் அவர்களது ஜாதிப் பிரிவை குறிப்பிட்டது மிகவும் அவமானகரமான செயல். புத்தியுள்ள யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள். இந்த சம்பவத்தை தேசியவாத காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.