தீபக் கோச்சாருக்கு வருமான வரித்துறை இரண்டாவது நோட்டீஸ்

ஐசிஐசிஐ வங்கித் தலைவர் சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாருக்கு வருமான வரித்துறை இரண்டாவது முறையாக திங்கள்கிழமை நோட்டீஸ் அளித்துள்ளது.
தீபக் கோச்சாருக்கு வருமான வரித்துறை இரண்டாவது நோட்டீஸ்
Updated on
1 min read

ஐசிஐசிஐ வங்கித் தலைவர் சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாருக்கு வருமான வரித்துறை இரண்டாவது முறையாக திங்கள்கிழமை நோட்டீஸ் அளித்துள்ளது.
வருமான வரித் துறை சட்டப் பிரிவு 139(9)-இன் கீழ் அவரது தனிப்பட்ட வருமானம் குறித்து விளக்கம் கேட்டு இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, இம்மாதத் தொடக்கத்தில் தீபக்கின் நூபவர் ரினியூவபிள்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
இது தவிர நூபவர் நிறுவனத்தில் அதிக பங்குகளை வைத்துள்ள டிஎச் ரினியூவபிள்ஸ் நிறுவனம் தொடர்பான விவரங்களைக் கேட்டு மொரீஷஸ் நாட்டுக்கு வருமானவரித் துறையின் வெளிநாட்டு வரிகள் பிரிவு அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்து விடியோகான் குழுமம் ரூ.3,250 கோடி கடன் பெற்றதில் எழுந்த முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ ஏற்கெனவே விசாரணையைத் தொடங்கியுள்ளது.
சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் தொடங்கிய நூபவர் ரினியூவபிள்ஸ் நிறுவனத்தில் விடியோகான் குழுமத்தின் தலைவர் வேணுகோபால் தூத் பல கோடி ரூபாய் முதலீடு செய்தார். அதற்கு அடுத்த 6 மாதங்களிலேயே தூத் ஐசிஐசிஐ வங்கியிடம் கடன் கேட்டு அணுகினார். அவருக்கு மிகப்பெரிய தொகையாக ரூ.3,250 கோடியை ஐசிஐசிஐ வங்கி கடனாக அளித்தது. கோச்சாரின் நிறுவனத்தில் முதலீடு செய்ததற்கு பிரதிபலனாகவே விடியோகான் நிறுவனத்துக்கு, ஐசிஐசிஐ வங்கி கடன் அளித்தது என்பது முக்கியக் குற்றச்சாட்டாகும். மேலும், கோச்சார், தூத் இருவரும் குடும்ப நண்பர்கள் என்று தெரிகிறது.
இந்த முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக நூபவர் நிறுவனத்தின் அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது. சந்தா கோச்சாரின் உறவினர் ராஜீவ் கோச்சாரிடம் தொடர்ந்து 5 நாள்கள் சிபிஐ விசாரணை நடத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com