இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மதப் பிரிவினையை இந்தியா ஊக்குவித்தது இல்லை

மதப் பிரிவினை நடவடிக்கைகளை ஒருபோதும் இந்தியா ஊக்குவித்தது இல்லை என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

News image
தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், புத்த மதத் துறவிக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கும் பிரதமர் மோடி.
Updated On :30 ஏப்ரல் 2018, 11:23 pm

DIN

மதப் பிரிவினை நடவடிக்கைகளை ஒருபோதும் இந்தியா ஊக்குவித்தது இல்லை என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். அதேபோன்று, மாற்றுக் கொள்கைகள் கொண்ட நாடுகளின் மீது நாம் தாக்குதல் நடத்தியதும் கிடையாது என்று அவர் கூறியுள்ளார்.
பிரதமர் தெரிவித்த இக்கருத்துகள் பொதுவானவை என்ற போதிலும், பாகிஸ்தானின் செயல்பாடுகளை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் அவை அமைந்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக எல்லையில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்நாட்டிலிருந்து பயங்கரவாதிகளை இந்திய எல்லைக்குள் ஊடுருவச் செய்யும் முயற்சியாக இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்களை கடும் சித்திரவதைக்கு அந்நாட்டு ராணுவத்தினர் ஆளாக்குவதாகவும் செய்திகள் வெளியாகின்றன. மக்களை மதரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் பாகிஸ்தான் பிளவுபடுத்தி வைத்திருப்பதாகவும், அதன் தொடர்ச்சியாகவே அந்நாட்டு பள்ளிகளில் கூட பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்த்தப்படுவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்தச் சூழலில், மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் சார்பில் புத்த பூர்ணிமா நிகழ்ச்சி தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில், மத்திய அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புத்த துறவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் ஒருபகுதியாக, இலங்கை, ஜப்பான், வியத்நாம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்திருந்த துறவிகளுக்கு பிரதமர் மோடி நன்கொடை வழங்கினார். உத்தரப் பிரதேசத்தின் சார்நாத் மற்றும் பிகாரின் புத்த கயை ஆகிய இடங்களில் அமைந்துள்ள மத்திய திபெத்தியக் கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கியும் அவர் கெளரவித்தார்.
இதைத் தொடர்ந்து அந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
புத்தரின் போதனைகள் அனைத்தும் மனிதநேயத்தையும், அன்பையும் வலியுறுத்துகின்றன. தற்போதைய நவநாகரீக உலகில் இரக்க குணமும், மனித நேயமும் மிகவும் அத்தியாவசியமான விஷயங்களாக உள்ளன. இந்தியாவைப் பொருத்தவரை அந்த இரு குணங்களையும் தன்னகத்தே கொண்ட இணையற்ற தேசமாக விளங்கி வருகிறது. புத்த மத சித்தாந்தங்கள் அனைத்துமே இந்த மண்ணில் இருந்தே தோன்றின. அதன் பிறகுதான் உலகம் முழுவதும் அவை வியாபித்தன.
மாற்று சிந்தனைகளுக்கும், நம்பிக்கைகளுக்கும், கொள்கைகளுக்கும் எதிராக ஒருபோதும் இந்தியா செயல்பட்டதில்லை. வேறு நாடுகள் மீதோ, மாற்று நம்பிக்கை கொண்டவர்கள் மீதோ அல்லது பள்ளிகள் மீதோ நம் நாடு தாக்குதல் நடத்தியதில்லை. மத ரீதியான பிரிவினைகளையும், பாகுபாடுகளையும் இந்தியா உருவாக்கியதில்லை என்பதே கடந்த காலம் காட்டும் வரலாறு என்றார் பிரதமர் மோடி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.