கர்நாடகத் தேர்தல்: பிரதமர் மோடி இன்று முதல் தீவிர பிரசாரம்
கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை (மே 1) முதல் தீவிர பிரசாரம் மேற்கொண்டு, பாஜக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.


கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை (மே 1) முதல் தீவிர பிரசாரம் மேற்கொண்டு, பாஜக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க உள்ளார். இதேபோல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோரும் அடுத்தடுத்து பிரசாரம் மேற்கொள்ளவிருப்பதால், தேர்தல் களம் விறுவிறுப்பாகியுள்ளது.
224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப் பேரவைக்கு மே மாதம் 12-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்னும் 12 நாள்களே இருப்பதால், தேசிய தலைவர்கள் கர்நாடகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் பெரிய மாநிலம் கர்நாடகம் மட்டும்தான் என்பதால், அக்கட்சியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றும் நோக்குடன் பாஜக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, 4 நாள்களாக கர்நாடகத்தில் முகாமிட்டு பெலகாவி, பாகல்கோட், தாவணகெரே உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார். ராஜ்நாத்சிங், நிதின்கட்கரி, ஸ்மிருதி இரானி, பிரகாஷ்ஜாவதேகர், பியூஷ்கோயல், அனந்த்குமார் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
மோடி சூறாவளி சுற்றுப்பயணம்: இந்நிலையில், பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை (மே 1) முதல் கர்நாடகத்தில் தீவிர பிரசாரத்தை தொடங்கவுள்ளார். மே 1-இல் சாமராஜ்நகர், மைசூரு, மண்டியா, உடுப்பி உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொள்ளும் அவர், மே 3-ஆம் தேதி கலபுர்கி, பீதர், யாதகிரி, பெல்லாரி, கொப்பள், பெங்களூருவில் நடக்கும் பிரசார கூட்டங்களில் பங்கேற்கவுள்ளார். பின்னர், மே 5, 7, 8-ஆம் தேதிகளில் பல்வேறு மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்யவிருக்கிறார். தங்களுக்கு வெற்றியைத் தேடி தருவதில் பிரதமரின் பிரசாரத்தை மிக முக்கியமானதாக பாஜகவினர் கருதுகின்றனர்.
'மோடி அலை வீசுகிறது': இதனிடையே, கர்நாடகத்தில் மோடி அலை வீசுவதால், பெரும்பான்மை பலத்துடன் பாஜக வெற்றி பெறும் என்று அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா தெரிவித்தார். மேலும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியுடன் தேர்தலுக்கு பின் கூட்டணி வைக்கமாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.
சித்தராமய்யா சரமாரி கேள்வி: இதனிடையே, கர்நாடகம் வரும் பிரதமருக்கு முதல்வர் சித்தராமய்யா சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக சுட்டுரையில் அவர் வெளியிட்ட பதிவுகளில் கூறியுள்ளதாவது: எங்களது மாநிலத்துக்கு வரும் பிரதமரை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், சுரங்க முறைகேடுகளில் தொடர்புள்ள தொழிலதிபர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்து ஏன்? பலாத்கார வழக்கில் சிக்கியவருக்கு வாய்ப்பளித்து ஏன்? ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது ஏன்? விவசாய கடன்களை தள்ளுபடி செய்யாதது ஏன்? இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தராதது ஏன்? இந்த கேள்விகளுக்கான பதிலை கன்னடர்களாகிய நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று சித்தராமய்யா தெரிவித்துள்ளார்.
முற்றுகையிடும் காங்கிரஸ் தலைவர்கள்: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மூத்த தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட தலைவர்கள் அடுத்தடுத்த நாள்களில் கர்நாடகத்தில் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர். மே 3, 4 ஆகிய தேதிகளில் கர்நாடகம் வரும் ராகுல்காந்தி, திறந்தவேனில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்க உள்ளார்.
மஜதவுக்கு ஆதரவாக: மஜத தலைவர்கள் எச்.டி.தேவகெளடா, குமாரசாமி, நடிகர் நிகில்கெளடா உள்ளிட்டோர் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகின்றனர். அதேபோல, பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உள்ளிட்ட தலைவர்கள் அடுத்தடுத்த நாள்களில் மஜத வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கவுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...