
ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக கீதா மிட்டல் சனிக்கிழமை நியமிக்கப்பட்டார்.
உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் பணிகளை கொலீஜியம் மற்றும் மத்திய அரசு செயல்படுத்தி வந்தது. அதன்படி, பல்வேறு மாநிலத்தில் உள்ள உயர் நீதிமன்றங்களுக்கு சனிக்கிழமை தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டனர்.
அதில், ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கீதா மிட்டல் நியமிக்கப்பட்டார். இதன்மூலம், ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி என்ற பெருமையை அவர் பெற்றார். இவர், இதற்கு முன் தில்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக (பொறுப்பு) செயல்பட்டு வந்தார்.
ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் சிந்து சர்மா வெள்ளிக்கிழமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதன்மூலம் அவர் ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்று பெருமையை பெற்றார்.
பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ராஜேந்திர மேனன் தில்லி உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி கல்பேஷ் சத்யேந்திர ஜாவேரி ஒரிஸா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளார்.
ஜார்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அனிருதா போஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அனிருதா போஸை தில்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது. ஆனால், போதிய அனுபவமின்மையை காரணம் காட்டி மத்திய அரசு அந்த பரிந்துரையை நிராகரித்தது.
மும்பை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி விஜயா.கே.தஹில்ரமணி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயர்வு வழங்கி நியமிக்கப்பட்டுள்ளார்.
பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி எம்.கே. ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரள உயர் நீதிமன்ற நீதிபதி ரிஷிகேஷ் ராய் அதே நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.