குற்றப் பின்னணி உள்ளவர்களுக்கு அரசியலில் இடமில்லை

குற்றப் பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையை வியாழக்கிழமை தொடங்கிய உச்ச நீதிமன்றம்,

Published On :30 ஜனவரி 2024, 9:57 pm IST


குற்றப் பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையை வியாழக்கிழமை தொடங்கிய உச்ச நீதிமன்றம், அரசியலில் கிரிமினல்களுக்கு இடமில்லை' என்று கூறியது.
இதுதொடர்பாக, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு மேலும் கூறியதாவது:
உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றம் இடையேயான அதிகாரப் பகிர்வுக்கான கோட்பாடானது, லட்சுமணன் கோடு' போன்றதாகும். அந்த எல்லையை கடந்து, நாடாளுமன்றத்துக்கான அதிகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட இயலாது. உச்ச நீதிமன்றம் என்பது, சட்டத்தை அறிவிப்பது. நாடாளுமன்றம் என்பது சட்டத்தை உருவாக்குவது.
எனவே, குற்றப் பின்னணி உள்ள நபர்களை தேர்தலில் போட்டியிடாமல் தடுக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றத்தின் அதிகாரத்தில் தலையிடக் கூடாது. இந்த விவகாரத்தில் ஒரு விதியை ஏற்படுத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறு மனுதாரர்கள் தரப்பில் கோரப்படுகிறது.
ஆனால், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடுவதா? அல்லது, இதுதொடர்பாக நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை இயற்றுவதா? என்பதே முக்கிய விவகாரம் ஆகும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, ஓர் எம்எல்ஏ, எம்.பி. மீதான குற்றச்சாட்டு நிரூபணமாகும் பட்சத்தில் அவர் இயல்பாகவே தகுதியை இழந்துவிடுகிறார்.
எனவே, தகுதி நீக்கத்துக்கான வரையறையை சேர்க்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்துவது கடினமான ஒன்று. வேட்புமனு தாக்கல் செய்யும் நபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் பட்சத்தில், அவருக்கு எதிராக விரைவு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
அரசியலில் கண்டிப்பாக கிரிமினல்களுக்கு இடமளிக்கக் கூடாது என்று நீதிபதிகள் அமர்வு கூறியது. அதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை வரும் 14-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
முன்னதாக, குற்றப் பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை கோரும் விவகாரம் நாடாளுமன்ற அதிகாரத்துக்கு உள்பட்டது என்றும், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்றும் மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் வாதாடினார்.
மனுதாரர்கள் சார்பில் வாதாடிய மூத்த வழக்குரைஞர் துவிவேதி, இந்த விவகாரத்தில் நாடாளுமன்றம் போதிய அளவு செயலாற்றவில்லை என்றும், இதில் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்றும் வாதாடினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.