அஸ்ஸாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர், சட்ட விரோதமாகக் குடியேறியவர் என்று நீதிமன்றம் அறிவித்ததை அடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர்.
அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வந்தது. அதில், அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் 40,000-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர். அந்தப் பணியில், மோரிகான் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த கைருல் இஸ்லாம் என்பவரும் ஈடுபட்டார்.
இதனிடையே, அவர் வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறியவர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தை விசாரித்த வெளிநாட்டினர் குறை தீர்ப்பாயம், அவரை சட்ட விரோதமாகக் குடியேறியவர் என்று கடந்த 2015-ஆம் ஆண்டு அறிவித்தது. இதையடுத்து, இந்த விவகாரத்தை விசாரித்த குவாஹாட்டி உயர் நீதிமன்றம், வெளிநாட்டினர் குறை தீர்ப்பாயத்தின் அறிவிப்பை உறுதிசெய்து கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவின் நகல், மாவட்ட நிர்வாகத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன் கிடைத்தது. இதையடுத்து, என்ஆர்சி கணக்கெடுப்பு பணியில் இருந்து அவர் கடந்த 13-ஆம் தேதி நீக்கப்பட்டார். இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், கைருல் இஸ்லாமை முக்கிய முடிவெடுக்கும் அதிகாரமிக்க பணியில் ஈடுபடுத்தவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தலைமறைவாக இருந்த கைருல் இஸ்லாமை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், மோரிகான் மாவட்டத்தில் உள்ள மொய்ராபாரி கிராமத்தில் அவரை போலீஸார் கைது செய்தனர். அவர், வங்கதேசத்தில் இருந்து கடந்த 1971-ஆம் ஆண்டு அஸ்ஸாமில் குடியேறியது விசாரணையில் தெரிவயந்துள்ளது என்று மாவட்ட காவல்துறை எஸ்.பி. ஸ்வப்னானில் தேகா கூறினார்.