அடுத்த மக்களவைத் தேர்தலில் மூன்றாவது அணி அமைவது உறுதி

'சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் பொருளாதாரத் தேக்க நிலை பாதித்துள்ளது.
அடுத்த மக்களவைத் தேர்தலில் மூன்றாவது அணி அமைவது உறுதி
Updated on
2 min read

'சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் பொருளாதாரத் தேக்க நிலை பாதித்துள்ளது. இது, அடுத்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மூன்றாவது அணி அமைக்க வழிவகுக்கும்' என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில் சமாஜவாதி கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்றுப் பேசினார். அதைத் தொடர்ந்து அவர் மும்பை நகரத்தைச் சேர்ந்த தன் கட்சிப் பிரமுகர்களையும் தொண்டர்களையும் திங்கள்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.
இதனிடையே, அகிலேஷ் யாதவ், மும்பை ஹிந்தி மொழி பத்திரிகையாளர் சங்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது:
நாட்டில் தற்போது ஒருவகையான பொருளாதார ஸ்திரத்தன்மையற்ற தன்மை நிலவுகிறது. ஒட்டுமொத்த நாடும் இந்தத் தேக்கமான, குழப்பமான நிலையால் பாதிக்கப்பட்டுள்ளது. வங்கிகள், விவசாயிகள், வர்த்தகர்கள், இளைஞர்கள், மாதச் சம்பளதாரர்கள் என்று சமூகத்தின் ஒவ்வொரு பிரிவும் துன்பத்தில் உள்ளனர். இந்த நிலையானது அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மூன்றாவது அணி உருவாக வழிவகுக்கும்.
ஜிஎஸ்டி வரிவிதிப்பு காரணமாகவே குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. ஆனால் குஜராத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள வர்த்தக சமூகம் கோபத்தில் உள்ளது என்பதே உண்மை. ஜிஎஸ்டி வரிவிதிப்பு அமலாக்கம் மற்றும் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை ஆகியவற்றின் காரணமாக, மக்களுக்கு நிலுவையில் உள்ள பல்வேறு தொகைகள் இன்னும் வந்து சேரவில்லை.
பொருளாதார ஸ்திரத்தன்மை நிலை காணப்படுவதாக நான் கருதுவது எப்படி? என்று கேட்கிறீர்கள். பொருளாதாரம் நன்றாக இருக்கிறது என்றால் வங்கிகளை மீட்பதற்கு அரசு கோடிக்கணக்கில் மூலதன நிதியளிப்பது ஏன்? இவ்வாறு அரசு நிதி அளிக்கிறது என்றால் வங்கித்துறை சுமுகமாக இயங்கவில்லை என்றே அர்த்தம்.
நிதிக் கொள்கை நன்றாக இருக்கும்பட்சத்தில் வங்கிகள் நிதி நெருக்கடியைச் சந்திப்பது ஏன்? விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்துவிட்டதாக ஆட்சியாளர்கள் மார்தட்டிக் கொள்ளும் அதேவேளையில் விவசாயிகள் மேலும் மேலும் கடன் சுமையில் சிக்கித் தவிப்பதும், தற்கொலை செய்து கொள்வதும் ஏன்? அன்னிய முதலீடுகளும் மிகவும் சரிந்து விட்டன.
காங்கிரஸ் கட்சியுடனான எங்களது தோழமை அப்படியே நீடிக்கிறது. எனக்கு ஒவ்வொரு எதிர்க்கட்சி மற்றும் அதன் தலைவருடனும் நல்ல நட்பு உள்ளது. நான் மாயாவதியுடன் இன்னும் பேசவில்லை. ஆனால் அவருடனும் எனக்கு நல்ல புரிதல் உள்ளது. 
குடியரசு தினத்தன்று உத்தரப் பிரதேசத்தின் காஸ்கஞ்ச் நகரில் கலவரம் வெடித்தது குறித்துக் கேட்கிறீர்கள். அது தொடர்பாக பல்வேறு விடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அதன் மூலம் அங்கு இளைஞர் ஒருவர் கொல்லப்பட எது தூண்டுதலாக அமைந்தது என்பது தெளிவாகியுள்ளது. அந்த விடியோ காட்சிகளில் ஒரு சமூகத்தினர் தங்கள் கைகளில் மூவர்ணக் கொடியேந்தி குடியரசு தினத்தைக் கொண்டாடச் செல்கின்றனர். தங்கள் கைகளில் காவிக்கொடி மற்றும் மூவர்ணக் கொடி ஆகிய இரண்டையும் வைத்துள்ள மற்றொரு சமூகத்தினர் அவர்களைத் 
தடுத்து நிறுத்த முயற்சிக்கின்றனர்.
உத்தரப் பிரதேசத்தில் சமூக நல்லிணக்கத்தை சமாஜவாதி கட்சிதான் சிதைக்கிறது என்பது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டாகும். நாங்கள் உண்மையிலேயே அதைச் செய்தால் பாஜக அரசு எங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கட்டும். ஏன் அவர்கள் அதைச் செய்யவில்லை?
சமாஜவாதி கட்சி விரைவில் பல்வேறு மாநிலங்கள் வழியாக மேற்கொள்ளப்படும் யாத்திரையைத் தொடங்க உள்ளது என்றார் அகிலேஷ் யாதவ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com