குருகிராம் பள்ளி மாணவர் கொலை வழக்கில் சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல்

குருகிராம் ரயான் பள்ளி மாணவர் கொலை வழக்கில், அங்குள்ள நீதிமன்றத்தில் சிபிஐ திங்கள்கிழமை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.
Published on

குருகிராம் ரயான் பள்ளி மாணவர் கொலை வழக்கில், அங்குள்ள நீதிமன்றத்தில் சிபிஐ திங்கள்கிழமை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.
குருகிராமின் போண்ட்ஸி பகுதியில் செயல்பட்டு வரும் ரயான் சர்வதேச பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்த பிரத்யும்னன் தாக்கூர் (7) என்ற மாணவர், பள்ளியின் கழிப்பறைக்குள் கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கை முதலில் விசாரித்த குருகிராம் காவல்துறையினர், அந்த பள்ளிப் பேருந்தில் உதவியாளராக பணியாற்றி வந்த அசோக் குமார் என்பவரை கைது செய்தனர். சிறுவனிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் முயற்சியில் அவனை அசோக் குமார் கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதனிடையே, பிரத்யும்னனின் பெற்றோர் விடுத்த கோரிக்கையை ஏற்று, கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றி ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர் உத்தரவிட்டார்.
திடீர் திருப்பம்: சிபிஐ விசாரணையில் திடீர் திருப்பமாக, அதே பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் கைது செய்யப்பட்டார். 
தேர்வுகள் தள்ளிப் போக வேண்டும் என்ற நோக்கத்தில், பிரத்யும்னனை அந்த மாணவர் கொலை செய்ததாக சிபிஐ தெரிவித்தது. அத்துடன், ஏற்கெனவே கைதான அசோக் குமாருக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
குற்றப் பத்திரிகை: இந்நிலையில், குருகிராம் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கில் சிபிஐ திங்கள்கிழமை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. நீதிபதி ஜஸ்பீர் சிங் குண்டு முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்ட அந்த குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றுள்ள விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.
ஜாமீன் மறுப்பு: இதனிடையே, ஜாமீன் கோரி, குற்றம்சாட்டப்பட்ட மாணவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, நீதிபதி ஜஸ்பீர் சிங் திங்கள்கிழமை நிராகரித்துவிட்டார். 
மாணவருக்கு எதிரான விசாரணையை சிபிஐ 60 நாள்களுக்குள் நிறைவு செய்யவில்லை; எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.
ஆனால், தற்போதைய நிலையில் அவரை ஜாமீனில் விடுவிப்பது சரியாக இருக்காது என்று கூறி மனுவை நீதிபதி நிராகரித்துவிட்டார்.
16 வயதாகும் அந்த மாணவரை, சிறுவனாக அல்லாமல் பெரியவராக கருதி விசாரணை நடத்த வேண்டும் என்று சிறார் நீதி ஆணையம் கடந்த டிசம்பரில் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com