உத்தரப் பிரதேச மாநிலம், காஸ்கஞ்ச் பகுதியில் வழிபாட்டுத் தலம் ஒன்றின் நுழைவாயிலுக்கு மர்மநபர்கள் சிலர் தீ வைத்ததால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், உடனடியாக தீயை அணைத்து நிலைமையைக் கட்டுப்படுத்தினர்.
இதன் தொடர்ச்சியாக, மெத்தனமாகப் பணியாற்றியதாகக் கூறி அந்த இடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காஸ்கஞ்ச் பகுதியில் அண்மையில் வெடித்த வன்முறையால் ஏற்பட்ட பதற்றம் சற்று தணிந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் இத்தகைய சம்பவம் நிகழ்ந்திருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பந்தப்பட்ட இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீ வைப்புச் சம்பவத்துக்குக் காரணமானவர்களைத் தேடிப் பிடிக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
உத்தரப் பிரதேசத்தின் காஸ்கஞ்ச் பகுதியில் குடியரசு தினத்தின் (ஜன.26) போது இரு வேறு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அது பெரும் கலவரமாக வெடித்தது. அதில் ஒருவர் பலியானர். பலர் காயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் ராணுவத்தினர் மற்றும் போலீஸார் பெருமளவு குவிக்கப்பட்டனர். சந்தேகத்துக்குரிய நபர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். அதைத் தவிர, வேறு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இதன் விளைவாக கடந்த சில நாள்களாக அங்கு பதற்றம் தணிந்து இயல்பு நிலை மாறிக்கொண்டிருந்தது. இந்தச் சூழலில், கஞ்ச்துத்வாரா பகுதியில் உள்ள வழிபாட்டுத் தலம் ஒன்றின் நுழைவாயிலுக்கு மர்ம நபர்கள் சிலர் திங்கள்கிழமை காலை தீவைத்ததாகத் தெரிகிறது.
தகவலறிந்து அங்கு விரைந்த பாதுகாப்புப் படையினர், உடனடியாகச் செயல்பட்டு தீயை அணைத்தனர். அந்த இடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் ஹரிசரண் மற்றும் நாகேந்திரா ஆகியோர் அலட்சியப் போக்குடன் இருந்ததாலேயே இச்சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் இடைநீக்கம் செய்து மாநில காவல் துறை உத்தரவு பிறப்பித்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் போலீஸார், தீ வைத்த நபர்களைத் தேடும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.