காவி போய் வெள்ளை வந்தது: உத்தரப் பிரதேசத்தில் 'கலர் அரசியல்'! 

பல்வேறு தரப்பிலும் இருந்து எழுந்த கடும் எதிர்ப்பினை அடுத்து உத்தரபிரதேச ஹஜ் அலுவலகத்திற்கு பூசப்பட்ட காவி நிறம் தற்பொழுது வெள்ளை நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
காவி போய் வெள்ளை வந்தது: உத்தரப் பிரதேசத்தில் 'கலர் அரசியல்'! 
Published on
Updated on
1 min read

லக்னௌ: பல்வேறு தரப்பிலும் இருந்து எழுந்த கடும் எதிர்ப்பினை அடுத்து உத்தரபிரதேச ஹஜ் அலுவலகத்திற்கு பூசப்பட்ட காவி நிறம் தற்பொழுது வெள்ளை நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பின்னர் அரசு அலுவலகங்களில் மற்றும் சார்ந்த இடங்களில் காவி நிறத்தின் ஆதிக்கம் தொடங்கியது. மாநிலத்தில் உள்ள பள்ளிகள், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பள்ளிப் பைகள், பேருந்துக்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் என அனைத்தும் தொடர்ந்து காவி வர்ணத்திற்கு மாற்றப்பட்டு வந்தது.

இதன் உச்சகட்டமாக மாநிலத் தலைநகர்  லக்னௌவில் உள்ள ஹஜ் இல்லமும் காவி மயமாகியது. ஹஜ் இல்லத்தின் வெளிப்புற சுவரில் காவி வர்ணம் பூசப்பட்ட விவகாரம் பூதாகாரமாக வெடித்தது. அதுவும் ஒரேநாள் இரவில் அந்த அலுவலகத்திற்கு காவி நிறம் பூசப்பட்டது இஸ்லாமிய சமூதாயத்தில் பெரும் எதிர்ப்பைச் சம்பாதித்தது.

பாஜக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சியான சமாஜ்வாடியும் மிக்க கடுமையாக விமர்சனம் செய்தது.  இது தொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுனில் சிங் சாஜான் பேசும் பொழுது, 'ஆளும் பாஜக அரசு தனது தவறுகளையும் தோல்விகளையும் மறைப்பதற்கு இப்போது நிற விவகாரத்தினை கையில் எடுத்துள்ளது. காவி நிறம் புனிதமானது என்று அவர்கள் கருதினால்,அவர்கள் உண்மையாக அரசியலுக்குள் அதனை நுழைக்க கூடாது' என்று தெரிவித்தார். 

இப்படி பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புக் குரல்கள் எழுந்ததன் காரணமாக, உத்தரபிரதேச மாநில அரசு 24 மணி நேரங்களில் சுவரின் நிறத்தை வெள்ளையாக்கியது. இதற்கிடையே நிறத்தினை மாற்றிய குறிப்பிட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com