ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி மாநிலங்களவையில் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் திங்கள்கிழமை அமளியில் ஈடுபட்டனர்.
இதற்கு நடுவே சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற விசாரணை அமைப்புகளை அரசியல் எதிரிகளுக்கு எதிராக மத்திய அரசு பயன்படுத்தி வருவதாக காங்கிரஸ் உறுப்பினர்கள் தெரிவித்த கருத்தும் அவையில் சலசலப்புக்கு வித்திட்டது. இவற்றின் காரணமாக மாநிலங்களவை அலுவல்கள் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு மாநிலங்களவை திங்கள்கிழமை கூடியது. கேள்வி நேரம் தொடங்கியபோது, தெலுங்கு தேச எம்.பி.க்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து கூச்சலிட்டனர்.
அக்கட்சி எம்.பி. ஒய்.எஸ்.செளத்ரி, சி.எம்.ரமேஷ் ஆகியோரது தலைமையிலான உறுப்பினர்கள், ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று முழக்கம் எழுப்பினர்.
வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு இந்த விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
அவர்களது கோரிக்கையை ஏற்பதாகக் கூறிய மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, செவ்வாய்க்கிழமை அதன் மீது சிறிய விவாதம் நடத்தப்படும் என்றார். ஆனால், அதை ஏற்காத தெலுங்கு தேச எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
இதற்கு நடுவே, உடனடி கேள்வி நேரத்தின்போது பேசிய காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் சர்மா, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காக சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது' என்றார். அதற்கு ஆளும் பாஜகவைச் சேர்ந்த உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக அவை அலுவல்களை பிற்பகல் வரை வெங்கய்ய நாயுடு ஒத்திவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







