கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: மஜதவில் 9 பேருக்கு வாய்ப்பு

கர்நாடகத்தில் மதச் சார்பற்ற ஜனதா தளம் சார்பில் முதல் கட்டமாக 9 பேருக்கு அமைச்சர் வாய்ப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
Updated on
1 min read

கர்நாடகத்தில் மதச் சார்பற்ற ஜனதா தளம் சார்பில் முதல் கட்டமாக 9 பேருக்கு அமைச்சர் வாய்ப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ்- மஜத கூட்டணி ஆட்சியில் முதல்வராக குமாரசாமியும், துணை முதல்வராக ஜி.பரமேஸ்வரும் பதவியேற்றுள்ளனர். இதைத் தொடந்து அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக இரு கட்சிகளிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மஜதவுக்கு முதல்வர் பதவி உள்பட 12 அமைச்சர் பதவிகளும், காங்கிரஸுக்கு துணை முதல்வர் பதவி உள்பட 22 அமைச்சர் பதவிகளும் பகிர்ந்து கொள்வது என முடிவானது. 
இந்த நிலையில், யாருக்கு அமைச்சர் வாய்ப்பு, துறைகள் பகிர்வில் இரு கட்சிகளிடையே குழப்பம் நீடித்தது. இதையடுத்து, இறுதிப் பட்டியல் தயாரிப்பை மஜத தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவெ கெளடாவிடமும், காங்கிரஸில் அக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியிடம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், புதன்கிழமை (ஜூன் 6) பிற்பகல் ஆளுநர் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் மஜத சார்பில் முதல்கட்டமாக புதிதாக 9 அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளதாக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். 
இதனிடையே, காங்கிரஸ் கட்சி சார்பில் அமைச்சர்களாகப் பதவியேற்பவர்களின் பெயரை அக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை வெளியிட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மஜத சார்பில் எச்.டி.ரேவண்ணா, ஜி.டி.தேவெ கெளடா, புட்டராஜ், சீனிவாஸ் உள்ளிட்டோருக்கு அமைச்சர் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல, காங்கிரஸில் ஆர்.வி.தேஷ்பாண்டே, எச்.கே. பாட்டீல், எம்.பி. பாட்டீல், கே.ஜே.ஜார்ஜ், ராமலிங்க ரெட்டி, யு.டி.காதர், பிரியங்க் கார்கே, கிருஷ்ண பைரேகெளடா, சதீஷ் ஜார்கியோளி, பரமேஸ்வர் நாயக், ரூபா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com